தமிழ்நாட்டை தொழில் முதலீடுகளுக்கு உகந்த மாநிலமாக மாற்ற வேண்டும் ; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாட்டை தெற்காசியாவிலேயே தொழில் முதலீடுகளுக்கு மிகவும் உகந்த மாநிலமாக மாற்ற வேண்டும் என்று பொருளாதார நிபுணர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுக் கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்றது. இக்கூட்டத்தில், அக்குழுவின் உறுப்பினர்கள் எஸ்தர் டஃப்லோ, ரகுராம் ராஜன், அரவிந்த் சுப்ரமணியன், ஜீன் டிரீஸ், எஸ்.நாராயண், மற்றும் தமிழ்நாடு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர்
எஸ். கிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு மற்றும் உற்பத்தி மேம்பாடு தொடர்பான ஆலோசனைகள் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தமிழ்நாடு அரசு 5 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான கடனில் இருப்பதையும், பொதுத்துறை நிறுவனங்கள் 2 லட்சம் கோடி ரூபாய் கடனில் இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். நிதி ஆதாரம் என்பது விரல் விட்டு எண்ணத்தக்க ஒரு சில துறைகளின் மூலமாக மட்டும்தான் வருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
நமது வளங்களைக் கொண்டு நம்மை வளப்படுத்திக் கொள்ளும் நிலைமையில் இருப்பதால், அதற்கென உள்ள வழிமுறைகளை தமிழ்நாடு அரசுக்கு காட்டுங்கள் என முதலமைச்சர் கேட்டுக்கொண்டார். தொழில் வளர்ச்சி - சமூக மாற்றம் - கல்வி மேம்பாடு ஆகிய அனைத்தும் ஒரே நேரத்தில் நடக்க வேண்டும் என்று அவர் கூறினார். தமிழ்நாட்டை தெற்காசியாவிலேயே தொழில் முதலீடுகளுக்கு மிகவும் உகந்த மாநிலமாக மாற்ற வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார். அதிரடியான மாற்றம் மூலமாகத்தான் இவை சாத்தியம் ஆகும் என்பதால், எத்தகைய மாற்றத்துக்கும் தயாராக தமிழ்நாடு அரசு இருக்கிறது என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
Comments