டெங்கு பரப்பும் ஏடிஸ் கொசு ; கொசு ஒழிப்புக்கு நடவடிக்கை
தேங்கியுள்ள நன்னீரில் முட்டையிட்டுப் பெருகிப் பகல் நேரத்தில் சுற்றித் திரிந்து டெங்கு வைரசைப் பரப்பும் ஏடிஸ் வகைக் கொசு குறித்து விவரிக்கிறது இந்தச் செய்தித் தொகுப்பு....
அண்டை மாநிலமான கேரளத்தில் ஏடிஸ் கொசுவால் பரவிய சிகா வைரசால் 15 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேநேரத்தில் தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் 282 பேரும், மதுரை மாவட்டத்தில் 267 பேரும், கோவை மாவட்டத்தில் 175 பேரும், திருநெல்வேலி மாவட்டத்தில் 193 பேரும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் கேரள மாநிலத்தை ஒட்டிய தமிழக மாவட்டங்களில் பொது சுகாதார இயக்ககம் மூலம் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
டெங்கு, சிக்குன்குனியா, சிகா ஆகிய வைரஸ்களைப் பரப்பும் ஏடிஸ் கொசு பகல் நேரத்தில் சுறுசுறுப்புடன் இருந்து எத்தனை பேரைக் கடித்தாலும் திருப்தி அடையாமல், பலரையும் பதம் பார்க்கும்.
ஏடிஸ் கொசு இருட்டான இடத்தில் தங்கி இருப்பதுடன் தேங்கி இருக்கும் நன்னீரில் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்கிறது. அரைக் கிலோமீட்டர் தொலைவு வரை பறக்கும் தன்மை கொண்ட இந்தக் கொசு பலரின் இரத்தத்தை உறியும்போது ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு வைரசைப் பரப்புகிறது.
கொசு ஒழிப்பு ஊழியர்கள் மூலம் பாதிப்புள்ள பகுதிகளில் கொசுக்களைப் பிடித்து ஆர்டிபிசிஆர் முறைப்படி டெங்கு வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டும் வருகிறது. தமிழகத்தில் தேனி, மதுரை, கோவை, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் காய்ச்சல் கண்டறியும் பணியில் கொசு ஒழிப்புப் பணியாளர்கள் 21 ஆயிரம் பேரைக் கொண்டு, பொது சுகாதார இயக்ககம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைவுபடுத்தியுள்ளது.
இந்நிலையில் வீடுகளிலும் சுற்றுப் புறங்களிலும் ஆங்காங்குத் தேங்கி நிற்கும் மழைநீரை அகற்றிக் கொசுக்கள் முட்டையிட இடமளிக்காமல் டெங்கு ஒழிப்புப் பணிகளுக்கு மக்களும் ஒத்துழைக்க வேண்டும் என அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Comments