வெட்டவெளியில் நெல் மூட்டைகள்.. மழையில் நனைந்து சேதம் - வேதனையில் விவசாயிகள்..!

0 2557

தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில், நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் வெட்டவெளியில் வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைவிட்டதால் விவசாயிகள் வேதனையில் ஆழ்ந்துள்ளனர்.

விழுப்புரம் அடுத்த கல்பட்டு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் நாளொன்றுக்கு 800 மூட்டைகளை மட்டுமே கையாளும் திறன் கொண்டதாகக் கூறப்படும் நிலையில், ஆயிரக்கணக்கில் நெல் மூட்டைகள் கொண்டுவரப்படுவதாகக் கூறப்படுகிறது. கடந்த 2 நாட்களாக பெய்த கனமழையில் இங்கு வைக்கப்பட்டிருந்த சுமார் 10 ஆயிரம் நெல் மூட்டைகள் நனைந்து நெல் மணிகள் முளைவிடத் தொடங்கியுள்ளன. 

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த செய்யூர் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் சுமார் 4 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளன.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை  அடுத்த குமாரமங்கலம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் திறந்தவெளியில் வைக்கப்பட்டிருந்த சுமார் 70 லட்ச ரூபாய் மதிப்பிலான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. 

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அடுத்த அன்னப்பன்பேட்டை நேரடி நெல் கொள்முதல் நிலையத்துக்கு 15 நாட்களுக்கு முன் கொண்டுவரப்பட்ட நெல் மணிகள், கொள்முதல் செய்யப்படாமல் சாலையோரம் குவித்துவைக்கப்பட்டு மழையில் நனைந்தன. 

காஞ்சிபுரம் நெல்வாய் பகுதியிலுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யப்பட்ட சுமார் 10 ஆயிரம் நெல் மூட்டைகள் கிடங்குக்கு கொண்டு செல்லப்படாமல் தேக்கி வைக்கப்பட்டதால், மழையில் நனைந்து சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments