3 டோஸ் முறைக்கு அனுமதி கோரும் ஃபைசர்-பயான்டெக்

0 2307

கமிர்நட்டி (Comirnaty) தடுப்பூசி, கொரோனாவுக்கு எதிராக அதிக திறனுள்ள வகையில் செயல்பட மூன்றாவது டோஸ் தேவைப்படலாம் என்பதால், 3 டோஸ் முறைக்கு ஃபைசர்-பயான்டெக் அனுமதி கோரியுள்ளன. டெல்டா வகைக்கு பிரத்யேக தடுப்பூசியை தயாரித்துள்ளதாகவும் அந்நிறுவனங்கள் கூறியுள்ளன.

ஃபைசர் மற்றும் பயான்டெக் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள தடுப்பூசிக்கு கமிர்நட்டி (Comirnaty) எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசியும், அஸ்ட்ராஜெனேக்கா தடுப்பூசியும் ஒரு டோஸ் மட்டும் போட்டுக் கொண்டால், கொரோனா வைரசின் டெல்டா வகைக்கு எதிராக போதிய திறனோடு செயல்படவில்லை என நேச்சர் என்ற அறிவியல் இதழில் தகவல் வெளியானது.

மேலும் ஃபைசர் தடுப்பூசி போட்டுக் கொண்ட 6 மாதங்கள் கழித்து, அதன் திறன் குறைந்து விடுவதாக அண்மையில் இஸ்ரேல் அரசு கூறியிருந்தது. முன்னர் 94 சதவீதம் அளவுக்கு பாதுகாப்பு வழங்கிய நிலை, 64 சதவீதமாகக் குறைந்துவிட்டதாக இஸ்ரேலிய சுகாதார அமைச்சக விவரங்களை மேற்கோள்காட்டி தகவல் வெளியானது. இந்த பின்னடைவு, இஸ்ரேலில் டெல்டா வகை பாதிப்பு அதிகரித்த நிலையில் பதிவு செய்யப்பட்டிருந்தது.

முழுமையான பாதுகாப்புக்கு, 2 டோஸ்கள் போட்டுக் கொண்ட 6 அல்லது 12 மாதங்களுக்குப் பிறகு மூன்றாவது டோஸ் போட்டுக் கொள்ள வேண்டியிருக்கலாம் என ஏற்கனவே ஃபைசர்-பயான்டெக் நிறுவனங்கள் கூட்டாக தெரிவித்திருந்தன. இந்த நிலையில் கமிர்நட்டி மூன்றாவது டோஸ் போட்டுக் கொண்டால், தென்னாப்பிரிக்கா, இந்தியாவில் காணப்பட்ட பீட்டா, டெல்டா வகை கொரோனாவுக்கு எதிராக சிறந்த பாதுகாப்பு அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், 2 டோஸ்கள் மட்டும் போட்டுக் கொண்ட நிலையோடு ஒப்பிடும்போது, மூன்றாவது டோஸ் ஆனது, கொரோனா உருமாற்ற வகைகளுக்கு எதிராக 5 முதல் 10 மடங்கு அதிக எதிர்ப்பு சக்தியை தூண்டுகிறது.

எனவே, 2 டோஸ்கள் மட்டும் போட்டுக் கொள்ளும் தற்போதைய நடைமுறைக்கு மாறாக, 3 டோஸ் முறை சிறந்த பாதுகாப்பை அளிக்கும் என்பதால் அதற்கான ஒப்புதலைக் கோர இருப்பதாக இரு நிறுவனங்களும் கூறியுள்ளன. இதனிடையே டெல்டா வகைக்கான பிரத்யேக தடுப்பூசியை ஜெர்மனியில் தயாரித்திருப்பதாகவும், ஃபைசர்-பயான்டெக் தெரிவித்துள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments