மகளிரணி காலை வாரிய கட்ட வண்டி..! போராட்டத்தில் சம்பவம்
நெல்லை மாவட்டம் வள்ளியூரில் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து நடந்த காங்கிரஸ் ஆர்ப்பாட்டத்தில் மாட்டுவண்டியில் பூட்டப்பட்ட மாடுகள் பின்பக்கம் நகர்ந்ததால், பிளாஸ்டிக் சேர் போட்டு மாட்டுவண்டியில் ஏற முயன்ற மகளிரணி தலைவி தவறிவிழும் நிலைக்கு தள்ளப்பட்டார்.
பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு எதிரான போராட்டம் என்றால் போதும் ஊரில் எங்காவது இருந்து ஒரு மாட்டுவண்டியை எடுத்து வந்து தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் ஊர்வலம் நடத்தி கோஷமிடுவது அரசியல் கட்சிகளின் வழக்கம்..!
அந்தவகையில் அண்மையில் தே.மு.திக சார்பில் மயிலாடுதுறையில் நடந்த பெட்ரோல் விலை உயர்வுகு எதிரான போராட்டத்தின் போது தேமுதிக நிர்வாகி ஒருவர் மாட்டுவண்டியில் அமர்ந்து கோஷங்களை முழங்கி வர, அடங்காமல் இழுத்துச்சென்ற மாடுகளை, வண்டிக்காரர் இழுத்துப்பிடித்துக் கொண்டிருந்தார்
ஒரு கட்டத்தில் கூட்டத்தை கண்டு மிரண்டுபோன மாடு வேகமாக ஓட்டம் பிடிக்க, அதனை பிடிக்க தொண்டர்களும் ஓடும் நிலை ஏற்பட்டது. அதே போல வள்ளியூரில் பெட்ரோல் டீசல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து நடந்த காங்கிரஸ் போராட்டத்தில் மகளிரணி தலைவி அமுதாவின் மகளிர் படை பெருந்திரளாக கூடி சாலையில் கியாஸ் சிலிண்டருக்கு மாலை போட்டு போராட்டம் நடத்தினர்.
போராட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் மகளிரணி தலைவியை மாட்டுவண்டியில் ஏறி கோஷ்மிடவைக்க திட்டமிட்டனர். உடனடியாக அங்கு ஒரு மாட்டுவண்டி கொண்டுவரப்பட்டது. மாட்டுவண்டியின் பின்னால் பிளாஸ்டிக் சேர் மீது ஏறி மகளிரணி தலைவி வண்டியில் ஏற முயற்சிக்க, சண்டி மாடுகள் இரண்டும் ரிவர்ஸ் கியர் போட்டதால் மாட்டுவண்டி பின்னால் சென்றது, இதனால் மகளிரணி தலைவி தவறி விழும் நிலைக்கு தள்ளப்பட்டார்
அருகில் இருந்தவர்கள் மகளிரணி தலைவியை தாங்கிப்பிடித்து மீட்டனர், பதற்றத்துடன் நின்றதால் மீண்டும் மாட்டுவண்டியில் ஏறுவதை அவர் தவிர்த்தார். இதனால் மாட்டுவண்டியை அங்கிருந்து போகச்செய்தனர்.
மக்களுக்காக போராட்டம் நடத்த போனால் கட்டை வண்டியில் பூட்டப்பட்டுள்ள சண்டிமாடுகளால் நடக்கின்ற சம்பவங்களே பெரும் போராட்டமாக இருப்பதாக பாதிக்கப்பட்ட அரசியல் பிரமுகர்கள் புலம்பும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
Comments