கணக்குப் பிள்ளையா? ஆடிட்டரா? ஒரே கன்பியூசன் - 80 லட்சம் ரூபாய் ஸ்வாகா

0 4808
எங்களுக்கே விபூதி அடிக்க பார்த்தல்ல..! ஆடிட்டரை கடத்திச் சென்று பூசை… அப்புறம் வந்த ட்விஸ்ட்…

அரசு வேலைக்காக தன்னிடம் பணத்தை ஏமாந்த 6 பேரை கடத்தல் வழக்கில் சிக்க வைத்த போலி ஆடிட்டரை, மோசடி வழக்கில் போலீசார் கைது செய்துள்ளனர். கணக்குப் பிள்ளையாக இருந்தவர் ஆடிட்டர் என கதை விட்டு 6 பேரிடம் 80 லட்சம் ரூபாய் சுருட்டிய நிலையில், ஒருவருக்கொருவர் விபூதி அடிக்கப் பார்த்து கம்பி எண்ணுவது பற்றிய செய்தித் தொகுப்பு..

தஞ்சாவூர் மாதாக்கோட்டை பகுதியை சேர்ந்த ராஜா, கடந்த சில ஆண்டுகளாக ஆடிட்டர் எனக் கூறிக் கொண்டு, சென்னை வடபழனியில் வசித்து வருகிறார். கடந்த 6-ஆம் தேதி இரவு தனது கார் ஓட்டுனருடன் எழும்பூரில் லட்சுமி மோகன் லாட்ஜூக்கு ராஜா சென்றுள்ளார். அங்கு அவர் சந்தித்த ஆட்களுடன் தகராறு ஏற்பட்டு, ராஜாவை அடித்து உதைத்து காரில் கடத்திக் சென்றுள்ளனர்.

ராஜாவின் கார் ஓட்டுனர் அளித்த புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் லாட்ஜில் தங்கியிருந்தது விருதாச்சலத்தை சேர்ந்த குமார், விழுப்புரத்தை சேர்ந்த அலெக்ஸ், பண்ருட்டியைச் சேர்ந்த கிள்ளிவளவன், கடலூரைச் சேர்ந்த சுதர்சன், சிதம்பரத்தை சேர்ந்த சிவபாலன், திருவண்ணாமலையை சேர்ந்த ராமமூர்த்தி ஆகிய 6 நபர்கள் என தெரியவந்தது. செல்போன் எண்ணை டிரேஸ் செய்த போலீசார், அதன் மூலம் தொடர்புகொண்டு மரியாதையாக ராஜாவுடன் காவல்நிலையத்திற்கு வந்து ஆஜராகுமாறு எச்சரித்துள்ளனர். இதனால் பயந்து போன 6 பேரும் எழும்பூர் காவல் நிலையத்திற்கு வந்துள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில் மின்வாரியம் மற்றும் பொதுப்பணி துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி கடந்த 2018-ம் ஆண்டு அவர்களிடமிருந்து ராஜா ரூபாய் 80 லட்சத்தை வாங்கி கொண்டு, வேலையும் வாங்கி தராமலும் வாங்கிய பணத்தை திருப்பி தராமலும் இழுத்தடித்து வந்தது தெரியவந்துள்ளது. 

ராஜாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் சென்னையில் சில சிறிய நிறுவனங்களில் கணக்கு வழக்குகள் பார்த்து வருவதும், இதனால் தன்னை ஆடிட்டர் எனக் கூறிக்கொண்டு, அரசு உயரதிகாரிகள் பலர் நெருக்கமாக இருப்பதாகவும் கூறி மோசடியில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. சென்னையில் பட்டினப்பாக்கம், பழவந்தாங்கல், மயிலாப்பூர் உள்ளிட்ட காவல்நிலையங்களில் மோசடி வழக்குகளில் கைதாகி 72 நாட்கள் சிறைவாசத்திற்குப் பிறகு, வெளியே வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

லாட்ஜ் ஒன்றில் அறை எடுத்து, பணம் ஏமாந்தவர்களை அங்கு வரவழைத்து கோபம் வரும்படி பேசி தகராறு செய்ததாக தெரிவித்துள்ளார். பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் அடித்து உதைத்து தூக்கிச் சென்றால், காவல்நிலையத்தில்  கடத்தல் புகார் கொடுக்குமாறு ஓட்டுநரிடம் கூறி வைத்திருந்ததாகவும் ராஜா தெரிவித்துள்ளார். 

இதையடுத்து ராஜா மீது மோசடிப் பிரிவில் வழக்கு பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர். சட்டப்படி காவல்துறையினரை அணுகாமல் போலி ஆடிட்டர் ராஜாவை கடத்திய ஆறு நபர்கள் கைது செய்யப்பட்டனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments