அண்ணே,உன் கிட்ட மட்டும் தான் சொல்றேன்..! கதைக்கே கதையா ? சீமான் - மாதவன் - லிங்குசாமி

0 4119
அண்ணே,உன் கிட்ட மட்டும் தான் சொல்றேன்..! கதைக்கே கதையா ? சீமான் - மாதவன் - லிங்குசாமி

3 வருடத்திற்கு பின்னர் தெலுங்கு படம் ஒன்றை இயக்க உள்ளதாக பிரபல இயக்குனர் லிங்குசாமி அறிவித்துள்ள நிலையில் அந்த படத்தின் கதை தன்னுடையது என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் இயக்குனருமான சீமான், சினிமா கதை எழுத்தாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார்.

கூர்மையான வசனங்களால் தமிழ் சினிமாவில் தம்பி என்ற வெற்றிப்படத்தை தந்தவர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்..! 10 வருடங்களுக்கு மேலாக சினிமா இயக்குவதை விட்டு விலகி இருந்த சீமான், தனது கதை திருடப்பட்டு விட்டதாக சினிமா கதை எழுத்தாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார்..!

சாக்லேட் பாயான மாதவனை ரன் படத்தின் மூலம் ஆக்சன் ஹீரோவாக்கிய இயக்குனர் லிங்குசாமி மீது தான் இந்த கதை திருட்டு புகாரை சீமான் தெரிவித்துள்ளார்..!

அதாவது கடந்த 2014ஆம் ஆண்டு நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான அஞ்சான் படத்திற்காக முதலில் ஒரு மும்பை கதை சொல்லப்பட்டது. அந்தகதை தன்னுடையது என்று அப்போது சீமான், பஞ்சாயத்தை கூட்டியதாக கூறப்படுகின்றது.

ஆனால் சீமான், லிங்குசாமி இருவருமே அந்தகதையை தங்களுக்கு சொந்தமான கதை என்று அடம்பிடித்ததால் அப்போதைக்கு அந்த கதையை ஒதுக்கி வைத்துவிட்டு, அஞ்சானுக்கு அவசர அடியாய் ஒரு மும்பை தாதா கதையை உருவாக்கி மொத்த வித்தையையும் காட்டினார் இயக்குனர் லிங்குசாமி..! அந்த கதை மக்களை கவராமல் லிங்குசாமியின் காலைவாரிவிட்டது.

அந்த கதை பஞ்சாயத்தின் போது படத்தை தான் விரைவில் எடுக்கப் போவதாக சீமான் கூறி இருந்த நிலையில் ஆண்டுகள் 7 கடந்த பின்னரும் சீமான் அதனை இயக்காததால், லிங்குசாமி மீண்டும் அந்த கதையை தற்போது கையில் எடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.

யாருக்கு சொந்தம் என்ற சர்ச்சையில் சிக்கிய அந்த கதையைதான் 3 வருடம் கழித்து தற்போது தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனியை வைத்து இயக்க உள்ள புதிய படத்திற்கு தேர்ந்தெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

உடனடியாக இந்த கதை தனக்கு சொந்தமானது என்று சீமான் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த கதை யாருக்கு சொந்தம் என்று ஏற்கனவே நடந்த பஞ்சாயத்தின் போது, சீமான் விரைவாக இந்த படத்தை இயக்கினால் அவருக்கு லிங்குசாமி விட்டுக் கொடுக்க வேண்டும், இல்லையேல் அந்த கதை லிங்குசாமிக்கு சொந்தம் என அப்போதைய நாட்டாமையார்கள் தீர்ப்பு சொன்னதாக கூறப்படுகின்றது.

அந்த தீர்ப்பின் அடிப்படையிலேயே லிங்குசாமி தற்போது இந்த கதையை கையில் எடுத்து இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் அரசியலில் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்துக் கொண்ட சீமான், புதிதாக படம் இயக்கும் எண்ணத்தில் இருப்பதாகவும் தன்னிடம் உள்ள அந்த கதையை இயக்க லிங்குசாமிக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது..

இருவருக்கும் சிந்தனையில் எப்படி ஒரே மாதிரியான கதை உதித்தது? என்று விசாரித்த போது இருவருக்கும் நெருக்கமான நடிகரான மாதவன் தனக்கு தெரிந்த உண்மை சம்பவம் ஒன்றை இருவரிடமும் பகிர்ந்துள்ளார். அதனை கற்பனை திறன் மிக்க லிங்குசாமியும், சீமானும் காட்சிகளாக்க திட்டமிட்டு கதையாக எழுதியுள்ளனர்.

தற்போது அந்த கதைதான் யாருக்கு சொந்தம் என விவாதத்திற்குள்ளாகி இருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த புகார் குறித்து இயக்குனர் லிங்குசாமியிடம் கேட்டபோது, தான் தெலுங்கு படத்தின் போட்டோ ஷூட்டில் இருப்பதாகவும் இந்த புகார் குறித்து தனது சகோதரர் விளக்கம் அளிப்பார் என்றும் தெரிவித்தார்.

அதே நேரத்தில் தமிழ் சினிமாவும் கதை களவு சர்ச்சையும், தண்டவாளமும், தொடரியும் போல பிரிக்க முடியாதது என்பதற்கு மற்றொரு சாட்சியாய் மாறி இருக்கின்றது இந்த சம்பவம்..!

இதனிடையே, ஏற்கனவே போடப்பட்ட சமரச ஒப்பந்தத்தின் படி கதை லிங்குசாமிக்கு சொந்தம் என்பது முடிவாகியுள்ளது. இது குறித்து தென் இந்திய கதை எழுத்தாளர் சங்கம் சீமானுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், எட்டு ஆண்டுகளுக்கு முன் இதே புகார் சீமானால் கொடுக்கப்பட்டிருந்ததாகவும், அந்த புகார் குறித்து இயக்குநர் செல்வமணி, விக்ரமன் ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தையில் சமரச உடன்பாட்டு எட்டப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த ஒப்பந்தம் படி கதை லிங்குசாமிக்கு தான் சொந்தம் எனவும், லிங்குசாமி ஒப்பந்த விதிகளை மீறாததால் அவர் மீது நடவடிக்கை எடுப்பதற்கான முகாந்திரம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments