மத்திய அமைச்சரவை விரிவாக்கம்; -எல்.முருகன் உள்ளிட்ட 43 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த எல்.முருகன் உள்ளிட்ட 43 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றுக் கொண்டனர்.
பிரதமர் நரேந்திரமோடி 2-வது முறையாக பதவி ஏற்ற பிறகு மத்திய அமைச்சரவை முதன்முதலாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை குடியரசு தலைவர் வெங்கையாநாயுடு பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா,அமித்ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அமைச்சர்களாக பதவியேற்ற 43 பேருக்கும் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
முதலில் மராட்டிய முன்னாள் முதலமைச்சர் நாராயண் ரானே, அசாம் முன்னாள் முதலமைச்சர் சர்பானந்த சோனோவால் ஆகியோர் அமைச்சராக பதவியேற்றனர்.
காங்கிரசில் இருந்து பாஜகவில் இணைந்த ஜோதிராதித்திய மாதவராவ் சிந்தியா அமைச்சராக பதவியேற்றார். மத்திய இணை அமைச்சர்களாக இருந்த ஹர்தீப்சிங் புரி, கிரண் ரிஜிஜூ மன்சுக் மாண்டவியா, ஜி.கிஷண் ரெட்டி, அனுராக்சிங் தாகூர் உள்ளிட்ட 7 பேர் கேபினட் அமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டனர்.
உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த அனுப்பிரியா சிங் படேல், கர்நாடகாவை சேர்ந்த ஷோபா உள்ளிட்ட 7 பெண்கள் மத்திய அமைச்சராக பதவி ஏற்றனர்.
தமிழக பாஜக தலைவராக இருக்கும் எல்.முருகன் அமைச்சராக பதவி ஏற்றார்.
மத்திய அமைச்சராக பதவி ஏற்றவர்களில் 36 பேர் புதுமுகங்கள். இணை அமைச்சராக இருந்த 7 பேருக்கு கேபினட் அமைச்சராக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கும் உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு அதிகபட்சமாக 7 அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
புதிதாக பதவி ஏற்றவர்களையும் சேர்த்து மத்திய அமைச்சரவையில் மொத்தம் 77 பேர் இடம்பெற்றுள்ளனர். புதிய அமைச்சர்களுக்கு விரைவில் இலாகா ஒதுக்கீடு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments