மத்திய அமைச்சரவை மாற்றம் - எந்த அடிப்படையில் விரிவாக்கம் ?
இன்று மாலை 6 மணிக்கு தமது அமைச்சரவையை பிரதமர் மோடி மாற்றி அமைப்பார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள் மற்றும் பெண்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2019 தேர்தலில் வெற்றி பெற்று 2 ஆம் முறையாக பிரதமரான மோடி, முதல் முறையாக தமது அமைச்சரவையை மாற்றி அமைக்கிறார்.
மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சி அமைய உதவிய ஜோதிராதித்ய சிந்தியா, அசாம் முன்னாள் முதலமைச்சர் சர்பானந்த சோனோவால், வருண் காந்தி, நாராயண் ரானே, லோக் ஜனசக்தி கட்சியின் பசுபதி பராஸ் ஆகியோர் நிச்சயம் அமைச்சராவார்கள் என கூறப்படுகிறது.
தாவர்சந்த் கெலாட் கர்நாடக ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளதால், அவரது அமைச்சர் பதவியும், மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் காலியாகிறது. அந்த இடத்தில் அண்மையில் பாஜகவில் சேர்ந்த ஜிதின் பிரசாதா, தினேஷ் திவேதி ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என சொல்லப்படுகிறது.
அப்னா தளத்தின் அனுப்பிரியா படேல் உள்ளிட்டோரும் அமைச்சராக வாய்ப்புள்ளது. அமைச்சரவை மாற்றத்தில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கூடுதல் பிரதிநிதித்துவம் அளிக்கப்படும் என்றும், இந்திய வரலாற்றிலேயே இளமையான அமைச்சரவையாக இருக்கும் என்றும் அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதேப் போன்று கூடுதல் பெண்களும், அதிகம் படித்தவர்களும் புதிதாக அமைச்சராக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 2024 நாடாளுமன்ற பொதுத்தேர்தல், அடுத்த ஆண்டு நடக்க உள்ள 5 மாநில தேர்தல் ஆகியவற்றை மனதில் வைத்து மோடி அமைச்சர்களை நியமிப்பார் என்றும் கருதப்படுகிறது.
நாட்டில் கூட்டுறவு இயக்கத்தை வலுப்படுத்த கூட்டுறவு அமைச்சகம் தனியாக உருவாக்கப்பட்டு, அதற்கும் அமைச்சர் நியமிக்கப்பட உள்ளார். மத்திய அமைச்சரவையில் 81 பேர் வரை இடம் பெறலாம். தற்போது 53 பேர் மட்டுமே உள்ளதால், புதிதாக 28 பேர் வரை அமைச்சர்களாக நியமிக்கலாம்.
Comments