ரூ.12 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள தாய், சேய் நல மருத்துவமனையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
திருவாரூரில் சுமார் 12 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த தாய், சேய் நல மருத்துவமனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் சுமார் 70ஆயிரம் சதுர அடி பரப்பளவில் 12 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இந்த மருத்துவமனையில் 250 படுக்கை வசதிகளும், நான்கு அறுவை சிகிச்சை மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், இரண்டு நாள் பயணமாக திருவாரூர் சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், புதிதாக அமைக்கப்பட்டுள்ள தாய், சேய் நல மருத்துவமனையை திறந்து வைத்தார்.
பின்னர், மருத்துவமனை வளாகம், பிரசவ வார்டு, குழந்தைகளுக்கான அவசர கால சிகிச்சை பிரிவு ஆகியவற்றை முதலமைச்சர் பார்வையிட்டார். மருத்துவமனையிலுள்ள கட்டமைப்பு வசதிகள் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், முதலமைச்சருக்கு விளக்கினார்.
முன்னதாக, திருவாரூர் மாவட்டம் காட்டூர் கிராமத்தில் தகுதியுள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டதை பாராட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டூர் ஊராட்சிமன்ற தலைவர் விமலா பிரபாகரனிடம் சான்றிதழ் வழங்கினார்.
தொடர்ந்து, திருவாரூர் மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டு குறைகளை கேட்டறிந்தார். நிரந்தர பணி, ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தூய்மை பணியாளர்கள் முதலமைச்சரிடம் மனு அளித்தனர்.
Comments