80 வயதான தாயை வீட்டை விட்டு துரத்திய கல் நெஞ்ச வாரிசுகள்..! சொத்துக்காக கொடுமை

0 5522

வாரிசு வேலை மற்றும் சொத்துக்களை எல்லாம் அபகரித்துக் கொண்டு 80 வயது தாயை கவனிக்காமல் விரட்டியதாக மகன் மற்றும் மகள்கள் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை திருவெற்றியூர் பகுதியை சேர்ந்த 80 வயதான கோமளா பாய், தள்ளாத வயதிலும் ஜீவனத்திற்காக சவுக்கார்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார்.

கோமளா பாயின் கணவர் சேஷாசலம் கடற்படை அதிகாரியாக பணியாற்றி பின்னர் அசோக் லேலண்ட் நிறுவனத்தில் பணிபுரிந்த நிலையில் 40 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார். ஒரு மகனும், 2 மகள்களும் வசதியாக வாழுகின்றனர். இந்நிலையில் மாநகராட்சி காப்பகத்தில் வசித்து வரும் கோமளா பாய் தலையில் காயத்துடன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்தார்.

10-ம் வகுப்பு வரை படித்திருந்த மூதாட்டி கோமளா பாய், மகள்கள் சத்யா, லஷ்மி ஆகியோரை வளர்த்து நல்ல இடத்தில் திருமணம் செய்து வைத்துள்ளார். கணவர் இறந்து விட்டதால் வாரிசு அடிப்படையில் அசோக் லேலண்ட் கம்பெனியில் தனது மகன் கமலக்கண்ணுக்கு வேலை வாங்கி கொடுத்துள்ளார்.

பின்னர் சொத்துக்களை சரிசமமாக பிரித்து பிள்ளைகளுக்கு கொடுத்த நிலையில், தாய் கோமளா பாயை கவனித்து கொள்ளாமல் மாதம் மூவாயிரம் பணம் கொடுப்பதாக கூறி, வீட்டைவிட்டு வெளியேற்றிவிட்டதாகவும், சொத்துக்களில் பங்கு பெற்ற மகள்களும் கண்டுகொள்ளவில்லை என்றும், கோமளா பாய் கண்ணீர் மல்க காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

தள்ளாடும் வயதில் மாநகராட்சி காப்பகத்தில் தங்கி வரும் மூதாட்டி கோமளாபாய், கீழே விழுந்து தலையில் கட்டுடன் காவல் ஆணையர் அலுவலகத்தில் நின்ற கோலம் பார்ப்பவரை கண்கலங்க வைத்தது.

மகன் மாத மாதம் கொடுக்கும் மூவாயிரத்துடன், முதியோர் உதவி தொகை ஆயிரம் என இந்த தொகையை வைத்து வாடகை வீட்டில் தங்கவோ, சாப்பிடவோ முடியாத நிலையில் காப்பாகத்தில் தங்கியிருப்பதாக கண்ணீர் விடும் மூதாட்டி, தனது மகனிடம் இருந்து குறைந்தபட்சம் 5 ஆயிரமாவது உதவி தொகையை பெற்று தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

தான் பெற்ற பிள்ளைகளை வளமாக வாழவைத்த கோமளா பாயை போன்று ஏராளமான தாய்மார்கள் கல் நெஞ்சம் படைத்த வாரிசுகளால் ஒரு வேளை உணவுக்காக காப்பகத்தில் கையில் தட்டுடன் காத்திருக்கும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

அதே நேரத்தில் மனைவியின் பேச்சைக்கேட்டு, தாயாரை பராமரிக்க தேவையில்லை என்று செயல்களால் தனது குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கும், கல்நெஞ்ச வாரிசுகளுக்கும் அதே காப்பகத்தில் ஒரு தட்டு காத்திருக்கின்றது என்பதே கசப்பான உண்மை..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments