ஒலிம்பிக்கில் ஜொலிக்கவிருக்கும் தமிழக வைரங்கள்..! வறுமையிலிருந்து பெருமையை நோக்கி

0 4367

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு தமிழகத்திலிருந்து தடகள வீரர் - வீராங்கனைகள் 5 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மிக எளிமையான, வறுமையான குடும்பப் பின்னணியில், பல்வேறு போராட்டங்களுக்கு இடையே கடுமையான பயிற்சிகளையும் கடந்து ஒலிம்பிக் போட்டிகளுக்கு அவர்கள் தேர்வாகி உள்ளனர். 

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் 23ஆம் தேதி தொடங்கும் ஒலிம்பிக் போட்டிகளில் 31ஆம் தேதி முதல் தடகளப் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் தமிழகத்தைச் சேர்ந்த ரேவதி வீரமணி, சுபா வெங்கடேசன், தனலட்சுமி சேகர், நாகநாதன் பாண்டி மற்றும் ஆரோக்கிய ராஜீவ் ஆகியோர் 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் ஒரே மாநிலத்தில் இருந்து தடகள வீரர்கள் 5 பேர் ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது தமிழத்துக்குப் பெருமையை தேடித் தந்துள்ளது.

மதுரையைச் சேர்ந்த ரேவதி வீரமணி, சிறுவயதிலேயே பெற்றோரை இழந்து பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்தவர். 12ம் வகுப்பு பள்ளி மாணவியாக  இருந்தபோது மண்டல அளவிலான தடகள போட்டியில் காலில் ஷூ இல்லாமல் ஓடிய ரேவதியின் திறமையைப் பார்த்த தடகளப் பயிற்சியாளர் கண்ணன் வியந்துபோயிருக்கிறார். தொடர்ந்து ரேவதிக்கு சரியான பயிற்சிகளை அளித்து, மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் தேசிய அளவிலும் பல்வேறு வெற்றியை குவிக்க வைத்திருக்கிறார் பயிற்சியாளர் கண்ணன். 

தன் வறுமை நிலையை எடுத்துக் கூறிய பிறகும் நம்பிக்கை அளித்து, அனைத்து வசதிகளையும் செய்துகொடுத்து தனது பயிற்சியாளர் ஓராண்டிலேயே ஜூனியர் லெவல் போட்டியில் பதக்கம் வெல்ல வைத்தார் எனக் கூறுகிறார் ரேவதி. 

ரேவதியைப் போன்றே திருச்சி மாவட்டம் குண்டூர் பகுதியை சேர்ந்த தனலெட்சுமியும் தந்தையை இழந்து கூலி வேலைக்குச் செல்லும் தாயின் அரவணைப்பில் வளர்ந்தவர். கடும் பொருளாதார போராட்டங்களுக்கிடையே பல்வேறு தேசிய தடகள போட்டிகளில் பங்கேற்று தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்றுள்ளார். தனலட்சுமியும் தனது சாதனைகளுக்கான காரண கர்த்தாவாக தனது பயிற்சியாளரையே கை காட்டுகிறார்.

ஒலிம்பிக் தடகளப் போட்டிக்குத் தேர்வாகியுள்ள மற்றொரு வீராங்கனையான திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சுபா வெங்கடேஷ், தனது பயிற்சியாளரின் முயற்சியால் பல்வேறு தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்று வந்துள்ளதாகக் கூறுகிறார். ஒலிம்பிக்கில் நிச்சயம் வெற்றி பெறுவேன் எனவும் சுபா நம்பிக்கை தெரிவிக்கிறார்.

சென்னை ஆயுதப்படையில் காவலராக இருந்துகொண்டே கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தேர்வாகி இருக்கிறார் மற்றொரு போட்டியாளரான நாகநாதன். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி சிங்கம்புலியம்பட்டியைச் சேர்ந்த நாகநாதன், கடந்த 2017-ஆம் ஆண்டுசென்னை காவல்துறை புதுப்பேட்டை ஆயுதப் படை பிரிவில் இரண்டாம் நிலை காவலராக பணியில் சேர்ந்துள்ளார்.

ஆடு மேய்க்கும் தந்தைக்கு 5 பிள்ளைகளில் ஒருவராக மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, விளையாட்டு வீரர்களுக்கான இட ஒதுக்கீட்டில் காவல்துறையில் சேர்ந்த நாகநாதனுக்கு உயரதிகாரிகள் பலர் ஊக்கம் கொடுத்து, பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்பதற்கு உதவியும் செய்து வந்துள்ளனர். 

தடகளப் போட்டிக்கான சிறந்த அணி அமைந்துள்ளதால் இம்முறை பதக்கம் வெல்லப் பிரகாசமான வாய்ப்பு ஏற்பட்டிருப்பதாக ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க 2-வது முறையாகத் தகுதி பெற்றுள்ள திருச்சியைச் சேர்ந்த வீரர் ஆரோக்கிய ராஜீவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். திருச்சி லால்குடியைச் சேர்ந்த ராணுவ வீரரான ஆரோக்கிய ராஜீவின் தந்தை ஒரு லாரி ஓட்டுநர்.

அர்ஜுனா விருது பெற்றவர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரரான ஆரோக்கிய ராஜீவ், ஏற்கெனவே 3 முறை ஆசியப் போட்டிகளிலும், பலமுறை தேசிய அளவிலான போட்டிகளிலும் பதக்கம் வென்றுள்ளார். 2016-ம் ஆண்டு நடைபெற்ற ரியோ ஒலிம்பிக் போட்டியைத் தொடர்ந்து, தற்போது 2-வது முறையாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டியிலும் பங்கேற்கத் தகுதி பெற்றுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments