படித்த இளைஞர்களை தொழில் முனைவோர்களாக உருவாக்கும் சுய வேலைவாய்ப்பு திட்டங்கள் விரைவுபடுத்தப்பட வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய பகுதிகளில் புதிய தொழிற்பேட்டைகளை உருவாக்கி, வேளாண் உற்பத்தி சார்ந்த தொழில் முனைவோர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் நலனுக்காகவும் மேம்பாட்டிற்காகவும் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் குறித்தும், அடுத்த 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு திட்டங்கள் குறித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடந்தது.
அதில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், படித்த இளைஞர்களை தொழில் முனைவோர்களாக உருவாக்க செயல்படுத்தப்படும் சுய வேலைவாய்ப்பு திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
மேலும் சுயவேலைவாய்ப்பு திட்டங்களில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், சிறுபான்மையினர் மற்றும் மகளிர் ஆகிய பயனாளிகளின் விகிதாசார பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டும் என்று முதலமைச்சர் அறிவுறுத்தினார்.
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், விண்வெளி வானூர்திகள், ரோபாடிக்ஸ் மற்றும் துல்லியமான கருவிகள் உற்பத்தி ஆகிய உயர் தொழில்நுட்பத் துறைகளில் ஈடுபட ஏதுவாக திட்டங்களை உருவாக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.
தமிழ்நாடு முழுவதும் ஒரே சீரான தொழில் வளர்ச்சியை உருவாக்கிட ஏதுவாக, தொழில் வளர்ச்சியில் பின் தங்கிய பகுதிகளில் புதிய தொழிற்பேட்டைகளை உருவாக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட முதலமைச்சர், வேளாண் உற்பத்தி சார்ந்த தொழில் முனைவோர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
Comments