முதலாளி பெண்ணை காதலித்து திருமணம் செய்த இளைஞர்... 'காதல்' பட பாணியில் சித்தப்பா செய்த கொடூரம்
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே, காதல் திருமணம் செய்த இளைஞரை காரில் கடத்திச் சென்று, பெண்ணின் சித்தப்பா உள்ளிட்ட நான்கு பேர் சேர்ந்து சரமாரியாக அரிவாளால் வெட்டி ஆற்றங்கரையோரம் வீசிச் சென்ற பகீர் சம்பவம் அரங்கேறியுள்ளது. புகாரின் பேரில் உடனடியாக களம் இறங்கிய போலீசார் 24 மணி நேரத்திற்குள் நான்கு பேரை கைது செய்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் கரடிபாக்கத்தை சேர்ந்த ஆறுமுகம், கடந்த ஓராண்டுக்கு முன்னர் சென்னையில் உள்ள ஏழுமலை என்பவரிடம் லாரி ஓட்டுநராக பணிபுரிந்துள்ளார். அவரது மகள் நந்தினியை காதலித்து, கடந்த மாதம் திருவெண்ணெய்நல்லூர் அடுத்த ஆணைவாரியில் உள்ள அய்யனார் கோவிலில் திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனை அறிந்த பெற்றோர் நந்தினியை காதல் கணவனிடமிருந்து பிரித்து, ஆனைவாரியில் உள்ள உறவினர் வீட்டில் விட்டுச் சென்றனர்.
அங்கு மூன்று நாட்கள் இருந்த நந்தினி, கரடிப்பாக்கம் கிராமத்திற்கு தமது காதல் கணவர் ஆறுமுகத்தின் வீட்டிற்கு சென்று விட்டார். இதனை அறிந்த நந்தினியின் சித்தப்பா அயன் என்கிற பழனி, மாமா பார்த்திபன் மற்றும் மேலும் இருவர் நேற்று முன்தினம் நள்ளிரவுக்குப் பிறகு, ஒரு மணியளவில் கரடிப்பாக்கம் கிராமம் சென்று, அங்கிருந்த ஆறுமுகத்தை காரில் வலுக்கட்டாயமாக ஏற்றி, திருவெண்ணைநல்லூர் அடுத்துள்ள மலட்டாற்றின் கரையோரம் அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு வைத்து வலது கால் முட்டி, இடது கால் முட்டி மற்றும் தொடை பகுதியில் அரிவாளால் வெட்டி, வீசிச் சென்றுள்ளனர்.
பின்னர் நந்தினி திருவெண்ணைநல்லூர் காவல் நிலையத்தில் நேற்று அதிகாலை 4:30 மணி அளவில் சென்று தனது கணவனை மீட்குமாறு கெஞ்சியுள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், விசாரணை நடத்தி, மலட்டாற்றின் கரையோரத்தில் கிடந்த ஆறுமுகத்தை மீட்டு முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், தனிப்படை போலீசார் நந்தினியின் சித்தப்பா அயன் என்கிற பழனியின் செல்போன் நம்பரை ஆய்வு செய்தனர். அந்த எண் சேலம் மாவட்டம் மேலசேரியில் பயன்பாட்டில் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அங்கு விரைந்த தனிப்படை போலீசார், தலைமறைவாக இருந்த நந்தினியின் சித்தப்பா, மாமா, மேலும் இருவர் என நான்கு பேரையும் கைது செய்து, கடத்தி கொலை செய்ய முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர். சம்பவம் நடைபெற்ற 24 மணி நேரத்திற்குள் குற்றவாளிகள் 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்த போலீசாருக்கு நந்தினி நன்றி தெரிவித்தார்.
Comments