தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான தளர்வுகள்
கொரோனா பரவல் குறைந்து வருவதை அடுத்து தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான தளர்வுகள் அமலுக்கு வந்தன.
கோவை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளதோடு, உணவகங்கள், தேநீர் கடைகளில் 50சதவீத வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
புதிய தளர்வுகளின் படி கோவை, ஈரோடு உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களுக்கு இடையேயும், மாவட்டங்களுக்குள்ளும் பேருந்துகள் இயங்கி வருகின்றன.
தமிழகம் முழுவதும் தனியார் வாகனங்களில் செல்வோர் இ-பாஸ், இ-பதிவு இன்றி பயணிக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே இரவு 7 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள கடைகள் இன்று முதல் இரவு 8 மணி வரை செயல்படலாம். உணவகங்கள், தேநீர் கடைகள், அடுமனைகள், தங்கும் விடுதிகள் மற்றும் உறைவிடங்களில் உள்ள உணவகங்களில், பார்சல் சேவைகள் மட்டும் வழங்கப்பட்டு வந்த நிலையில், இன்று முதல் 50 சதவீத வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட அனுமதிக்கப்பட்டனர்.
நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி உடற்பயிற்சி கூடங்களும் அனைத்து மாவட்டங்களிலும் திறக்கப்பட்டுள்ளன.
டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் செயல்படும். அனைத்து துணிக்கடைகள் மற்றும் நகைக்கடைகள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்பட்டு வருகின்றன.
ஷாப்பிங் மால்கள் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும்.
அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். சுமார் 2 மாதங்களுக்கு பின் மதுரை மீனாட்சி அம்மன் கோவில், பழனி முருகன் கோவில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி உள்ளிட்ட கோயில்களில் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
இருப்பினும், திரையரங்குகள், அனைத்து மதுக்கூடங்கள், நீச்சல்குளங்கள், அரசியல் சார்ந்த கூட்டங்கள், பொழுதுபோக்கு மையங்கள், விளையாட்டு, கலாசார நிகழ்வுகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், உயிரியல் பூங்காக்கள் திறக்க விதிக்கப்பட்ட தடை தொடர்கிறது.
Comments