மேகதாது திட்டம் கைவிடக் கோரி எடியூரப்பாவுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

0 4173
மேகதாது திட்டம் கைவிடக் கோரி எடியூரப்பாவுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

காவிரியில் மேகதாது அணை கட்டும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என வலியுறுத்திக்  கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவுக்குத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

காவிரியில் மேகதாது அணை கட்டத் தமிழகம் எதிர்ப்புத் தெரிவிக்கக் கூடாது என வலியுறுத்தி எடியூரப்பா எழுதிய கடிதத்துக்கு மு.க.ஸ்டாலின் பதில் கடிதம் எழுதியுள்ளார். அதில், மேகதாதில் 67 டிஎம்சி கொள்ளளவுள்ள அணை கட்டும் திட்டத்தையும், பவானி ஆற்றில் இரு நீர் மின்திட்டங்களைத் தமிழகம் செயல்படுத்துவதையும் ஒப்பிடுவது சரியாக இருக்காது எனக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தின் இரு நீர்மின் திட்டங்களும் குடிநீருக்கும் பாசனத்துக்கும் நீர் கிடைப்பதைப் பாதிக்காது எனக் குறிப்பிட்டுள்ளார்.

கபினி அணைக்குக் கீழுள்ள கபினி வடிநிலப்பகுதி, கிருஷ்ணராஜசாகர் அணைக்குக் கீழுள்ள காவிரி வடிநிலப்பகுதி, சிம்சா, ஆர்க்காவதி, சுவர்ணாவதி வடிநிலப்பகுதி ஆகியவற்றில் இருந்து தமிழகம் நோக்கி வரும் தடையற்ற நீரோட்டத்தைத் தடுத்துத் திசை திருப்பும் வகையில் மேகதாது அணைத் திட்டம் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, மேகதாது திட்டத்தைச் செயல்படுத்துவது தமிழக விவசாயிகளின் நலன்களைப் பாதிக்காது எனக் கூறுவதை ஏற்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

பெங்களூரின் குடிநீர்த் தேவைக்கு நீர் எடுக்க உச்சநீதிமன்றம் அனுமதித்துள்ளதே மேகதாது அணை கட்டுவதற்கான காரணம் எனக் கூறினாலும், இந்தத் திட்டம் பெங்களூரில் இருந்து நெடுந்தொலைவில் இருப்பதால் அது சரியாகாது எனத் தெரிவித்துள்ளார்.

பெங்களூருக்குக் குடிநீர் எடுப்பதற்கான கட்டமைப்பு ஏற்கெனவே உள்ள நிலையில், நாலே முக்கால் டிஎம்சி நீர் எடுக்க 67 டிஎம்சி கொள்ளளவுள்ள அணை கட்ட வேண்டியுள்ளதாகக் கூறுவதையும் ஏற்க முடியாது எனக் குறிப்பிட்டுள்ளார்.

இப்போது தமிழ்நாட்டின் பங்காக உச்சநீதிமன்றம் நிர்ணயித்துள்ள நீரின் அளவு, திறமையாக முழுவதும் பயன்படுத்தும் அளவுக்கு மட்டுமே உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

நீர்ப் பயன்பாட்டுத் திறனை மேம்படுத்தப் பழைய கட்டமைப்புகளை நவீனப்படுத்தவும், மேம்படுத்தவும் வேண்டியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பணிகள் முடியும் வரை உச்சநீதிமன்றம் நிர்ணயித்த அளவு நீரில் தமிழகத்தின் தேவையை நிறைவு செய்ய முடியாது என்பதால் மேற்கண்ட உண்மைகளையும், இவற்றில் உள்ள சிக்கல்களையும் கருதி மேகதாது திட்டத்தைத் தொடர வேண்டாம் என வலியுறுத்தியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments