பிறந்ததும் இறந்ததாய் கூறப்பட்ட குழந்தை மயானத்தில் உயிர்த்தெழுந்த மாயம்..!

0 6438
பிறந்ததும் இறந்ததாய் கூறப்பட்ட குழந்தை மயானத்தில் உயிர்த்தெழுந்த மாயம்..!

தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவர்களால் இறந்துவிட்டதாகக் கூறி பெற்றோரிடம் கொடுக்கப்பட்ட பச்சிளம் குழந்தை மயானத்துக்கு எடுத்துச் சென்று புதைக்கும் நேரத்தில் உயிருடன் இருப்பது தெரியவந்து பெற்றோரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தாமரைக்குளத்தைச் சேர்ந்தவர்கள் பிலவேந்திரராஜா - பாத்திமாமேரி தம்பதி. ஏற்கனவே இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில், 3வதாக கர்ப்பம் தரித்துள்ளார் பாத்திமாமேரி.

ஆறு மாத கர்ப்பிணியாக இருந்த பாத்திமாமேரிக்கு சனிக்கிழமை இரவு பிரசவ வலி ஏற்பட்டு வீட்டிலேயே பனிக்குடம் உடைந்தது. உடனடியாக அவரை உறவினர்கள் வாகனம் மூலமாக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு நள்ளிரவு 12.30 மணிக்கு அனுமதிக்கப்பட்ட அவருக்கு அதிகாலை 3.30 மணிக்கு பெண் குழந்தை பிறந்ததாகவும், 700 கிராம் மட்டுமே இருந்த அந்த குழந்தை சுவாசப் பிரச்சனையால் பிறந்த சிறிது நேரத்திலேயே இறந்து விட்டதாகவும் செவிலியர்கள் தெரிவித்துள்ளனர்.

மருத்துவமனை நடைமுறைகளுக்குப் பின்னர் ஞாயிற்றுக்கிழமை காலை எட்டு முப்பது மணிக்கு இறப்பு தொடர்பான ஆவணங்களுடன் குழந்தையை ஒரு பிளாஸ்டிக் வாளியில் போட்டு பிலவேந்திரராஜாவிடம் ஒப்படைத்துள்ளனர்.

மயானத்தில் ஏற்கனவே தோண்டப்பட்டு தயார் நிலையில் இருந்த குழிக்குள் புதைப்பதற்காக தூக்கியபோது குழந்தையின் உடலில் அசைவு காணப்பட்டுள்ளது.

குழந்தை உயிருடன் இருப்பதைக் கண்டு இன்ப அதிர்ச்சி கொண்ட பெற்றோரும் உறவினர்களும் மீண்டும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு குழந்தையுடன் ஓடினர். வெண்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு குழந்தைக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

குறைமாதத்தில் பிறந்து, மூச்சு விடாமல் இருந்த குழந்தையை சரியாக பரிசோதிக்காமல் இறந்துவிட்டதாக தவறாக கருதிவிட்டனர் என்றும் சம்மந்தப்பட்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் துறை ரீதியான விசாரணை நடத்தப்படும் என்றும் மருத்துவமனையின் தலைவர் பாலாஜிநாதன் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments