ரபேல் விமானங்கள் வாங்கியதில் ஊழலா? - விசாரணைக்கு உத்தரவிட்டது பிரான்ஸ்
59 ஆயிரம் கோடி ரூபாய் ரபேல் போர்விமான பேரத்தில் ஊழல் நடந்ததா என்று அறிய தனி நீதிபதியை நியமித்து நீதி விசாரணைக்கு பிரான்ஸ் அரசு உத்தரவிட்டது . இதனால், ரபேல் ஒப்பந்த சர்ச்சை மீண்டும் சூடு பிடித்துள்ளது.
நாட்டின் விமானப்படையை பலப்படுத்துவதற்காக பிரான்சிடம் இருந்து ரபேல் ரக போர் விமானங்களை வாங்குவதற்காக, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது ஒப்பந்தம் செய்யப்பட்டது.அப்போது, ஒரு விமானத்தின் விலை 526 கோடி ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.
பின்னர், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி பொறுப்பேற்றது. பிரதமராக மோடி பதவியேற்றதைத் தொடர்ந்து, ஒரு விமானத்தின் விலை 1,607 கோடி ரூபாய் என்ற அடிப்படையில், 59 ஆயிரம் கோடி ரூபாய்க்கு 36 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மறுஒப்பந்தம் செய்யப்பட்டது.இந்த ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளதாக காங்கிரஸ் தொடர்ந்து குற்றம்சாட்டியது. இந்த குற்றச்சாட்டுகளை மத்திய பாஜக அரசு நிராகரித்தது. இந்தியாவிடம் இதுவரையில் 21 ரபேல் விமானங்கள் ஒப்படைக்கப்பட்டு விட்டன.
தற்போது ரபேல் விமான ஒப்பந்தம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த பிரான்ஸ் அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், அடங்கி கிடந்த இந்த ஒப்பந்தம் பற்றிய சர்ச்சை மீண்டும் சூடுபிடித்துள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் வரும் 19ல் தொடங்குகிறது. ஏற்கனவே, தடுப்பூசி தட்டுப்பாடு, பொருளாதார சீர்குலைவு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு போன்ற பல்வேறு பிரச்னைகளை நாடாளுமன்றத்தில் எழுப்ப காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. ரபேல் முறைகேடு விவகாரமும் வெடித்து இருப்பதால், நாடாளுமன்ற கூட்டத் தொடரில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments