செல்பேச்சால் பாழுங்கிணற்றில் விழுந்த விஞ்ஞானி..!
செல்போனில் பேசியபடி மெய்மறந்து சென்ற இளைஞர் ஒருவர் 60 அடி ஆழம் கொண்ட பாழுங்கிணற்றுக்குள் விழுந்த சம்பவம் சித்தூரில் அரங்கேறி உள்ளது. 17 மணி நேரம் உயிருக்கு போராடிய செல்ப்பிரியர் கயிறு கட்டி மீட்கப்பட்ட பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.
கிணற்றில் இறங்கி பூனைகுட்டியை காப்பாற்ற போராடுவது போல கயிற்றில் தொங்கிக் கொண்டு இருக்கும் இவர் தான் செல்பிரியர் சந்திரசேகர்..!
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பலமனேரைச் சேர்ந்த சந்திரசேகர் வெள்ளிக்கிழமை மதியம் அங்குள்ள தாபாவில் வயிறு முட்ட உணவு சாப்பிட்ட திருப்தியில் நண்பருடன் செல்போனில் பேசியபடியே, விஞ்ஞானி போல அங்கும் இங்கு நடந்தவர், மெய்மறந்து தாபாவுக்கு பின்பக்கம் சென்றுள்ளார். அங்கு கைவிடப்பட்ட நிலையில் செடிகொடிகளால் சூழப்பட்ட 60 அடி ஆழ கிணறு இருப்பதை கவனிக்க தவறியதால், கால் வழுக்கி செல்போனுடன் அந்த பாழுங்கிணற்றில் தவறி விழுந்தார் சந்திரசேகர்.
நீச்சல் தெரிந்ததால் கிணற்றில் 20 அடி ஆழத்திற்கு தண்ணீர் இருந்தாலும் நீந்தியபடியும் கிணற்றில் இருந்த மரங்களின் வேர்களைப் பிடித்துக் கொண்டும் தன்னை யாராவது காப்பாற்ற வரமாட்டார்களா ? என்று தவிக்கும் சத்யசோதனை ஏற்பட்டது
நீண்ட நேரம் கத்தியும் யாரும் உதவிக்கு வரவில்லை. சந்திரசேகர் கிணற்றில் விழுந்து 17 மணி நேரம் கிணற்றிலேயே உதவிக்காக காத்துகிடந்த நிலையில் சனிக்கிழமை காலை அவ்வழியாக ஜீவன் குமார் என்பவர் கால்நடைகளை மேய்ச்சலுக்காக அழைத்து சென்று கொண்டு இருந்தார். சத்தம் கேட்ட சந்திரசேகர் தன்னை காப்பாற்றும் படி கதறினார்
கிணற்றிலிருந்து சத்தம் கேட்டவுடன் கிணற்றில் உயிருக்காக ஒருவர் போராடி கொண்டுருப்பதை பார்த்து உடனடியாக போலீசாருக்கும் கிராம மக்களுக்கும் ஜீவன் குமார் தகவல் கொடுத்தார். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புப் படையினர் மற்றும் போலீசார் கிணற்றுக்குள் இருந்த சந்திரசேகரை மூன்று மணி நேரம் போராடி ஒருவழியாக கயிறு கட்டி கிணற்றிலிருந்து மேலே இழுத்து வந்தனர்.
தான் பிழைப்பேன் என்று கனவிலும் நினைக்கவில்லை என்று கூறிய சந்திரசேகர், தன்னைக் காப்பாற்றிய ஜீவன் குமாருக்கும் தீயணைப்பு துறையினருக்கும் நன்றி தெரிவித்து கொண்டார். சந்திர சேகரை போன்ற செல்பிரியர்கள் வாகனங்களில் செல்லும் போதும், சாலை, தண்டவாளங்களை கடக்கும் போதும் ஏதோ செல்போனுடன் ஒட்டிப்பிறந்தது போல பேசிக் கொண்டு செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். அவர்கள் தங்களது அந்த விபரீத செயலை கைவிடாவிட்டால் விபத்தில் சிக்கி விலைமதிப்பில்லா உயிரை இழக்க நேரிடும் என்று காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.
Comments