கைதியிடம் களவாடிய கதை கைதி..! –மினி அட்லியான லோகேஷ் கனகராஜ்!
சென்னை புழல் ஜெயிலில் வைத்து கைதி ஒருவர் எழுதிய கதையை 15 ஆயிரம் ரூபாய் அட்வான்ஸ் கொடுத்து வாங்கி, அவருக்கு தெரியாமல் அதனை கைதி என்ற பெயரில் படமாக்கி 105 கோடி ரூபாய் வசூலை வாரிகுவித்த தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவிடம் 4 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இயக்குனர் கோகேஷ் கனகராஜின் கதை திருட்டால், கைதி 2ஆம் பாகத்துக்கு விழுந்த தடை குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...
ஷங்கர்..... ஏ.ஆர்.முருகதாஸ்..... அட்லி... இவர்கள் வரிசையில் கதை திருட்டு குற்றச்சாட்டுக்குள்ளாகி இருப்பவர் கைதி படத்தின் மூலம் நட்சத்திர இயக்குனரான லோகேஷ் கனகராஜ்..!
ஹிட் படங்களை புதுச்சாயம் பூசி, மழைச்சாரல் போல மசாலா தூவி மெகா ஹிட் அடிப்பது ஏ.ஆர்.முருகதாஸ் ஸ்டைல்..! பழைய படங்களில் இருந்து காட்சிகளை அப்படியே சுட்டு அதனை தற்போதைய நட்சத்திரங்களின் நடிப்பால் ருசியான இட்லியாக்கி ரசிகர்களுக்கு பறிமாறுவது அட்லியின் வழக்கம்..! தற்போது அந்த லிஸ்டில் சத்தமில்லாமல் சேர்ந்துள்ளார் கைதி பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ்..!
2019 தீபாவளிக்கு வெளியாகி மெகா ஹிட் அடித்த கைதி படத்தின் கதை அவருடையது அல்ல என்றும், சென்னை புழல் ஜெயிலில் கொலை வழக்கு ஒன்றில் சிக்கி கைதியாக இருந்த கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த ராஜீவ் என்பவர் எழுதிய கதை என்று கூறப்படுகின்றது. 2007ஆம் ஆண்டில் சிறையில் இருந்து விடுதலையான ராஜீவ், தனது நண்பருடன் சினிமா தயாரிப்பாளர் எஸ்.ஆர்.ராஜன் என்பவரை சந்தித்து இந்த கதையை கூறியுள்ளார்.
அவர்களும் இந்த கதைக்காக 15 ஆயிரம் ரூபாய் முன்பணம் கொடுத்து படமாக்கும் போது மீதி பணம் தருவதாக கூறி அனுப்பியுள்ளனர். அதன் பின்னர் இந்த படம் குறித்த தகவல் ராஜீவுக்கு தெரிவிக்கப்படவில்லை, அண்மையில் தொலைக்காட்சி ஒன்றில் கைதி படத்தை பார்த்த ராஜீவ் தனது கதையை அப்படியே படமாக்கி இருப்பதை கண்டு மிரண்டு போய் விட்டார். தனது கதையின் ஒரு பகுதியை மட்டும் முதல் பாகமாக தயாரித்து இருப்பதை கண்ட அவர் உடனடியாக வழக்கறிஞர் உதவியுடன் தன்னிடம் உள்ள ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதன் அடிப்படையில் கைதி படத்தின் 2 ஆம் பாகத்தை எஸ்.ஆர் பிரபு தயாரிக்க நீதிமன்றம் தடை விதித்துள்ளது, மேலும் அனுமதி இல்லாமல் தயாரிக்கப்பட்ட முதல் பாகத்து கைதி படத்தின் கதைக்கான உரிமைத் தொகையாக 4 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு எஸ்.ஆர்.பிரபுவுக்கு நோட்டீசும் அனுப்பப்பட்டுள்ளது.
ஒரு கைதி ஜெயிலில் இருக்கும் போது தான் கேள்விப்பட்ட ஒரு தகவலை முழு நீளக்கதையாக்கி அதன் மூலம் சிறையில் இருந்து வெளியேவந்த பின்னர் மறுவாழ்வு தேட நினைத்துள்ளார். ஆனால் அவரை கூட அட்வான்ஸ் கொடுத்து எமாற்றி கதையை திருடும் தந்திரம் மிகுந்த கதாசிரியர்கள் கோடம்பாக்கத்தில் வலம் வருவது வேதனைக்குரியது. அதேநேரத்தில் தனது சிந்தனைக்கு உதிக்காமல் வேறு ஒருவரின் சிந்தனையில் தோன்றிய கதையில் கொஞ்சம் பட்டி டிங்கரிங் பார்த்து தனது பெயரை போட்டுக் கொள்ளும் இயக்குனர்கள் வரிசையில் லோகேஷ் கனகராஜும் சேர்ந்துவிட்டாரா? என்பதே அவரது ரசிகர்களின் ஆதங்கமாக உள்ளது.
இது குறித்து விளக்கம் அளித்துள்ள தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, கைதி படத்தின் கதை லோகேஷ் கனராஜுடையது , இதுவரை தனக்கு நீதிமன்ற நோட்டீஸ் எதுவும் வரவில்லை, அப்படி வந்ததும் அதற்கு தக்க பதில் கூறுவதாக தெரிவித்தார்.
இதற்கிடையே ஷாருக்கானை வைத்து அட்லி இயக்கி வரும் சங்கி என்ற படம் முடியும் தருவாயில் உள்ள நிலையில், அது 2006ஆம் ஆண்டு வெளியான விஜயகாந்த் படம் ஒன்றின் சாயலில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. வழக்கம் போல பழைய கதையை அட்லி சுட்டாரா? அல்லது அட்லி போலவே விஜயகாந்த் படத்தின் இயக்குனர் 15 வருடங்களுக்கு முன்பே சிந்தித்தாரா? என்ற சங்கதி... ஷாருக்கானின் சங்கி வெளிவந்தால் வெளிச்சத்துக்கு வரும்..!
Comments