மூன்று படைகளையும் ஒருங்கிணைத்து பயன்படுத்தும் புதிய வியூகத்தில் வான்வழி சக்திக்கு தனிப்பெரும் பங்கு உண்டு - விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ்.பதாரியா
தேச பாதுகாப்பிற்கான அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள, மூன்று படைகளையும் ஒருங்கிணைத்து பயன்படுத்தும் புதிய வியூகத்தில், விமானப் படை துணைக்கரமாக இருக்கும் என முப்படைத் தளபதி கூறியிருந்த நிலையில், அதை மறுக்கும் விதமாக, வான்வழி சக்திக்கு பெரும்பங்கு உண்டு என விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ்.பதாரியா கூறியுள்ளார்.
உலகளாவிய பயங்கரவாத எதிர்ப்பு கவுன்சில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய முப்படைத் தளபதி பிபின் ராவத், தரைப்படைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் விமானப் படையின் செயல்பாடுகள் அமையும் என்றார். ராணுவத்தில் பீரங்கி பிரிவின் அல்லது பொறியியல் பிரிவின் ஆதரவு போல, விமானப் படை ஆதரவுக்கரமாக இருக்கும் என அவர் கூறினார்.
இதேநிகழ்ச்சியில் பின்னர் பேசிய விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ். பதாரியா, ஆதரவுக்கரமாக மட்டுமல்ல, வான்வழி சக்திக்கு மிகப்பெரும் பங்கு இருக்கும் என்றும், ஒருங்கிணைக்கப்பட்ட போர்க்களத்தில் ஆதரவாகச் செயல்படுவதா என்பது மட்டுமே பிரச்சனை அல்ல என்றார். முப்படைத் தளபதி பேசியது பற்றி எதுவும் குறிப்பிடாமலே, விமானப்படை தளபதி இந்த கருத்தை தெரிவித்தார்.
பாகிஸ்தான் மற்றும் சீன எல்லைகளில், முப்படைகளின் சக்தியையும் திறன்மிக்க வகையில் விரைந்து ஒருங்கிணைத்துப் பயன்படுத்தும் வகையில், integrated theatre commands என்ற புதிய வியூகம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கேற்ப படைப் பிரிவுகள், ஆயுதங்கள் மற்றும் ராணுவத் தளவாடங்களின் பயன்பாடு புதிய முறையில் திட்டமிடப்படுகிறது. இந்த புதிய வியூகத்தின் கீழ்,ஒருங்கிணைப்பு பிரிவுகள் நேரடியாக முப்படை தளபதியின் ஆணையின் கீழ் இருக்கும். ஒருங்கிணைந்த புதிய வியூகம் என்பதை செயல்படுத்த முழுமையாக உறுதிபூண்டிருப்பதாக கூறியுள்ள விமானப் படை தளபதி, சில விஷயங்களை ஆலோசனைக் கூட்டங்களில் பேசி விவாதித்து சரிசெய்வோம் என தெரிவித்துள்ளார்.
Comments