ஆத்தாடி ஊசியா..? மரத்தில் பதுங்கிய கிராமத்து ராசாக்கள்..!
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் மலை கிராமத்தில் கொரோனா தடுப்பூசி போடச் சென்ற மருத்துவ குழுவினரை பார்த்து பயந்து ஓடிய கிராமத்து இளைஞர்கள் அங்குள்ள மரத்தில் ஏறி பதுங்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளும் நிலையில் கொரோனா பரவல் குறைய தொடங்கி இருக்கும் கோவை மாவட்டத்தில் தொண்டாமுத்தூரை சுற்றியுள்ள மலை கிராமங்களில் கொரோனா தடுப்பூசிக்கு அஞ்சி மக்கள் ஓடும் நிலை ஏற்பட்டுள்ளது
கோவையில் மாநகர் மற்றும் ஊரக பகுதியில் தினமும் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு, கையிருப்பில் உள்ள தடுப்பூசிகளை சுகாதாரத்துறையினர் மக்களுக்கு செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் மலைகிராம பழங்குடி மக்கள் யாரும் முகாம்களுக்கு வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன் வராததால் சுகாதாரத்துறை அதிகாரிகள் மலைகிராமங்களுக்கே நேரடியாக சென்று தடுப்பூசி செலுத்த திட்டமிட்டனர்.
இதற்காக தொண்டாமுத்தூரை அடுத்த முள்ளாங்காடு, கல்கொத்திபதி, சர்க்கார் பூரத்திபதி, வெள்ளைபதி, சீங்கப்பதி உள்ளிட்ட மலைகிராமத்திற்கு 500 தடுப்பூசிகளுடன் சுகாதாரத்துறை மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் சென்றனர். இவர்களை கண்ட கிராம மக்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். சிலர் தோட்டப் பகுதிகளுக்கு சென்று ஒளிந்து கொண்டனர். அங்கிருந்த இளைஞர்கள் மரத்தில் ஏறிப்பதுங்கிக் கொண்டனர்
மரத்தில் பதுங்கி இருந்த கிராமத்து ராசாக்களை தடுப்பூசியின் நன்மைகளை எடுத்துக்கூறி செவிலியர் ஒருவர் மரத்தில் இருந்து இறங்கிவரச்செய்தார். சுமார் 600 வாக்காளர் உள்ள அந்த கிராமத்தில் வெரும் 57 பேரும், 90 பேர் இருந்த கிராமத்தில் வெரும் 7 நபர்கள் மட்டுமே தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.
இதையடுத்து மருத்துவர்கள், செவிலியர்கள் கிராம மக்களின் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு அழைப்பு விடுத்தனர். அபோது பெரியவர் ஒருவர் தடுபூசி போட்டுக் கொள்ளாமல் இருப்பதற்கு புது புது காரணங்களை கூறினார்
தற்போது தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு வேறு பாதிப்பு ஆகவில்லை என்றால் நாங்களும் தடுப்பூசி செலுத்தி கொல்கிறோம் என கிராம மக்கள் கூறி விட்டு சென்று விட்டனர். இதனால் எடுத்துச் சென்ற தடுப்பூசிகள் மீண்டும் கிடங்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மலைகிராமங்களுக்கு கொரோனா பரவாது என்ற பொதுப்படையான பேச்சு அவர்களிடம் உள்ளது. முன்பு போல இல்லாமல், தொழில், வியாபாரம் என நகர மக்களோடு பழகிவாழும் மலைக்கிராம மக்கள் முன்னெச்சரிக்கையாக கொரோனா தடுப்பூசிப்போட்டுக் கொள்வது அவர்களுக்கு நலம் பயக்கும் என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Comments