பாம்பன் பாலத்துக்குள்ள பஸ் இறங்கி இருக்கும்..! ‘பாய்ச்சல்’ பால்சாமி…!
ராமேஸ்வரத்தில் இருந்து அரைபோதையில் அரசுப் பேருந்தை இயக்கிச் சென்ற ஓட்டுனர் ஒருவர், தாறுமாறாக பேருந்தை ஓட்டியதால் பாம்பன் பாலத்திற்கு முன்னதாக தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டார். 3 நாட்களாக காத்திருக்க வைத்து விருப்பமில்லாத வழித்தடத்திற்கு வாய்ப்பு வழங்கப்பட்டதால் வெறுத்துப் போய் பேருந்தை பாம்பன் பாலத்துக்குள் இறக்க முயன்ற விபரீதம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு
ராமேஸ்வரம் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் இருந்து திருச்சி செல்லும் பேருந்தை, ஓட்டுநர் பால்சாமி என்பவர், நடத்துனர் சந்திரசேகரனுடன் சேர்ந்து எடுத்துக் கொண்டு ராமேஸ்வரம் பேருந்து நிலையத்திற்கு வந்தார்.
22 பயணிகளுடன் புறப்பட்ட சிறிது நேரத்தில் ஓட்டுநர் பால்சாமி பேருந்தை சாலையில் நாலாபுறமும் தாறுமாறாக ஓட்டினார். இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் சந்தேகமடைந்து ஓட்டுநரை விசாரித்த போது அவர் மது போதையில் இருந்தது தெரிய வந்துள்ளது.
பேருந்தை நிறுத்துமாறு பயணிகள் ஓட்டுநர் பால்சாமியிடம் கூறியுள்ளனர். ஆனால் தொடர்ந்து பேருந்தை வேகமாக இயக்கி தங்கச்சிமடம் காவல் நிலையம் எதிரே இருந்த இரும்பு தடுப்பில் மோதி தடுப்பை சேதப்படுத்தினார். இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் அலறியடித்து கூச்சலிட்டனர்.
தொடர்ந்து பேருந்தை பால்சாமி ஓட்டினால் கட்டுப்பாட்டை இழந்து பாம்பன் பாலத்தில் மோதி பேருந்து கடலுக்குள் போய் விடும் என்ற அச்சத்தில், நடத்துனர் சந்திரசேகரன் பாம்பன் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, பாம்பன் பேருந்து நிலையத்தில் போலீசாரால் பேருந்து நிறுத்தப்பட்டது.
பின்னர் பயணிகள் பத்திரமாக இறக்கப்பட்டு மாற்று பேருந்துகளில் ஏற்றி திருச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பாம்பன் போலீசார் ஓட்டுநர் பால்சாமியை பரிசோதித்தபோது அவர் மது போதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, ஓட்டுநர் பால்சாமி மீது வழக்கு பதிவு செய்த தங்கச்சிமடம் போலீசார் அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்வதற்காக ராமேஸ்வரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
மதுபோதையில் இருந்த பேருந்து ஓட்டுநர் பால்சாமி ஒரு இடத்தில் உட்காராமல் அங்குமிங்குமாக அலைந்து கொண்டு, தனக்குத்தானே பேசி போதையில் உளறிக் கொண்டிருந்தார்.
தான் 13 வருடங்களாக பேருந்தை பச்சை குழந்தை போல் பார்த்து கொண்டதாகவும், நாகர்கோவில் வழித்தடத்தில் செல்லும் அந்த பேருந்தை தன்னிடம் தராததால், நான்கு நாட்கள் உணவருந்தாமல் இருந்ததாக வேதனை தெரிவித்த ஓட்டுனர் பால்சாமி, மது அருந்திய நிலையில் தூங்கிய தன்னை தட்டி எழுப்பி திருச்சி வழித்தடத்தில் செல்லும் வேறு பேருந்தை இயக்க சொன்னதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் பேருந்தை தாறுமாறாக ஓட்டி பாம்பன் பாலத்தில் நிறுத்தியதாகவும் கூறி அதிரவைத்தார்
மருத்துவ பரிசோதனையின் போது மருத்துவர்களிடம் 'நேற்று இரவு ஒரு குவார்ட்டர் பாட்டில் மட்டும் குடித்தேன். காலையில் சாப்பிடாததால் எனக்கு அந்த போதை இருக்கிறது. பல் துலக்கி சாப்பிட்டால் எல்லாம் சரியாகி விடும் என்றார்.
மருத்துவர்கள் நடத்திய பரிசோதனையில் ஓட்டுநர் மது போதையில் இருப்பது உறுதி செய்யப்பட்டது. மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் தங்கச்சிமடம் போலீசார் போலீஸ் வாகனத்தில் அழைத்து சென்றபோது செய்தி சேகரித்த ஒளிபதிவாளர்களை பார்த்து 'கை அசைத்து டாட்டா காட்டி செய்தியை நல்லா போடுங்க' என சிரித்த முகத்துடன் கூறி சென்றார்.
மதுபோதையில் பேருந்தை இயக்கி பயணிகளை பீதி அடைய செய்ததால் ஓட்டுநர் பால்சாமியை பணி இடை நீக்கம் செய்து ராமநாதபுரம் போக்குவரத்து கழக மண்டல மேலாளர் உத்தரவிட்டார். மதுபோதையில் அரசு பேருந்து ஓட்டுநர் பயணிகளுடன் பேருந்தை இயக்கிய சம்பவம் பேருந்து பயணிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
Comments