திருட்டு பணத்தில் சொகுசு வாழ்க்கை ; ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீசார்

0 5457
திருட்டு பணத்தில் சொகுசு வாழ்க்கை ; ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீசார்

எஸ்பிஐ நூதன கொள்ளை விவகாரத்தில், 2 மாதம் ஜெயிலு பின்னர் பெயிலு என, கொள்ளையடித்த பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து பொழுதை கழித்து வந்த கொள்ளையன்களை காத்திருந்து கொக்கி போட்டு தூக்கிய சென்னை போலீசாரின் சேசிங் பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு....

புது புது சைபர் குற்றங்களை கண்டுபிடித்து கொள்ளையடிப்பதில் கில்லாடிகளாக இருந்த இந்த ஹரியானா மாநில மேவாட் கொள்ளையர்கள் தமிழ்நாட்டில் எஸ்பிஐ வங்கி டெபாசிட் மிஷின்களுடன் கூடிய ஏ.டி.எம்.களில் நூதன முறையில் சுமார் ஒரு கோடி ரூபாய் வரை திருடிச் சென்றனர். இவர்களை பிடிக்க ஹரியானா சென்ற தியாகராயர் நகர் துணை ஆணையர் ஹரிகிரண் தலைமையிலான தனிப்படை 4 கொள்ளையன்களை கைது செய்து, தமிழகம் திரும்பியது.

இந்த தனிப்படைக்கு பதிலாக ஐ.பி.எஸ். அதிகாரி கார்த்திகேயன் தலைமையிலான தனிப்படை ஹரியானா சென்றுள்ளது. இந்தநிலையில், தமிழகம் திரும்பிய தனிப்படை போலீசார் கொள்ளையர்களை பிடித்த சுவாரஸ்ய பின்னணியை கூறியிருக்கின்றனர். இந்த வழக்கில் கிடைத்த சிசிடிவி பதிவுகளின் படி, கொள்ளையர்கள் கோடம்பாக்கத்திலுள்ள தனியார் நிறுவனத்தில் இருந்து வாடகைக்கு இருசக்கர வாகனத்தை வாங்கிச் சென்றதையும், அங்கு கொடுக்கப்பட்டிருந்த அடையாள அட்டையை வைத்து அவர்கள் ஹரியானாவின் மேவாட் என்ற இடத்தை சேர்ந்தவர்கள் என்பதையும் போலீசார் கண்டுபிடித்தனர்.

இதனையடுத்து, ஹரியானா சிறப்பு அதிரடிப்படை உதவியுடன் சுமார் 200 போலீசார், கொள்ளைக் கூட்டத்தின் கூடாரமான மேவாட் பகுதியை சோதனையிட முயன்றனர். ஆனாலும், கொள்ளையடிக்கும் பணத்தை சிலவற்றை கிராமத்திலுள்ளவர்களுக்கும் அவர்கள் கொடுத்து வந்ததால், கிராம மக்களே போலீசார் மீது தாக்குதல் நடத்தி விரட்டியடித்ததாக கூறப்படுகிறது. 2 முறை கிராமத்திற்குள் நுழைய முயன்ற போலீசாருக்கு முதலில் ஏமாற்றமே மிஞ்சியது.

பின்னர், நேரடித் தாக்குதலில் பயனில்லை என்று உணர்ந்த தனிப்படை போலீசார், ரூட்டை மாற்றி அப்பகுதி முழுவதையும் ரகசியக் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வந்தனர். கொள்ளையர்கள் அப்பகுதியை விட்டு வெளியே வர வைக்க, போலீசார் மீண்டும் சென்னைக்கே சென்றுவிட்டதாக தகவலை கசியவிட்டனர். போலீசார் திட்டமிட்டபடியே கொள்ளை கும்பலின் அமீர் அர்ஸ் என்ற திருட்டு மீன் வலிய வந்து வலையில் சிக்கியது. கிராம மக்கள் போல் மப்டியில் காத்திருந்த போலீசார் கிராமத்தை விட்டு வெளியே வந்த அமீர் அர்ஷை கொக்கி போட்டு தூக்கினர். அமீர் சிக்கியதை அறிந்து கொண்ட கொள்ளை கும்பல் செல்போன்களை அணைத்து வைத்துவிட்டு உச்சகட்ட உஷார் நிலையில் இருந்துள்ளது.

இதனையடுத்து, அமீர் அர்ஷை அழைத்துக் கொண்டு போலீசார் சென்னைக்கு சென்றுவிட்டதாக மீண்டும் ஒரு தகவலை கசியவிட்டனர்.
இதனை உண்மை என நம்பிய வீரேந்தர் ராவத், இரண்டு நாட்களுக்கு பிறகு தனது செல்போனை ஆன் செய்துள்ளான். அந்த சிக்னலை வைத்து வீரேந்தரை சுற்றி வளைத்தனர். இதே பாணியில் நசீம் உசைனையும் தனிப்படை போலீசார் பிடித்தனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் கொள்ளை குழுவுக்கு தலைவனாக செயல்பட்ட சவுக்கத் அலியையும் கைது செய்தனர்.

மீதமுள்ளவர்களையும் பிடிக்க அங்கு முகாமிட்டுள்ள தனிப்படையினர் அவர்களை பிடிக்க கண்காணிப்பை வலுப்படுத்தியுள்ளனர். கும்பலின் மற்றொரு தலைவனான சஹதப் கான் ராஜஸ்தானில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தனிப்படை போலீசார் அவனை பிடிக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், கொள்ளை கும்பலிடம் இருந்து இதுவரை 4.5 லட்சம் ரூபாய் மட்டுமே மீட்கப்பட்டுள்ளது. திருடிய பணம் அனைத்தையும் சொகுசு வாழ்க்கைக்காகவே பயன்படுத்தியதாக வாக்குமூலம் அளித்துள்ள கொள்ளையர்கள், கத்தியில்லாமல், ரத்தமில்லாமல் அகிம்சை வழியில் சைபர் குற்றங்கள் மூலமாகவே கொள்ளையடிப்பதையே வாடிக்கையாக கொண்டுள்ளனர். இந்த நிலையில், ஒவ்வொரு ஏடிஎம்-லும் நடந்த கொள்ளை சம்பவத்திற்கு தனித்தனியாக வழக்கு பதிந்து, எளிதில் வெளியில் வரமுடியாத அளவிற்கு வழக்கை வலுவாக்கி, மீதமுள்ள கும்பலையும் பிடித்து ஒட்டுமொத்த பணத்தையும் மீட்போம் என சென்னை போலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments