ஆன்லைன் வகுப்பால் மனசோர்வு : தலைமுடியை சாப்பிட்ட மாணவி; வயிற்றில் உருவான கட்டி அகற்றம்..!
ஆன்லைன் வகுப்பால் ஏற்பட்ட மனசோர்வால் பள்ளி மாணவி ஒருவர் தலைமுடியை தொடர்ந்து சாப்பிட தொடங்கியதால், வயிற்றில் உருவான கட்டி அறுவை சிகிச்சை செய்து அகற்றப்பட்டது.
விழுப்புரம் அருகே 15 வயதுப் பள்ளி மாணவி கொரோனா ஊரடங்கால் ஆன்லைன் வகுப்பில் பாடங்களைப் படித்து வந்துள்ளார். பெற்றோர்கள் இருவரும் பணிக்குச் சென்ற நிலையில், அவர் வீட்டில் பாட்டியுடன் இருந்துள்ளார்.
தனிமையில் ஆன்லைன் வகுப்புகளில் படித்து வந்துள்ளதால், அவருக்கு மனச்சோர்வு ஏற்பட்டு, கடந்த 15 நாட்களுக்கு முன்பு மருத்துவமனைக்கு வயிற்று வலி, வாந்தி எனப் பெற்றோர்களால் அழைத்து வரப்பட்டுள்ளார்.
மருத்துவர் ராஜமகேந்திரன் மாணவியை பரிசோதனை செய்து பார்த்தபோது, அவரின் வயிற்றில் கட்டி ஒன்று இருப்பதைக் கண்டறிந்தனர், அறுவை சிகிச்சை மூலம் அகற்றினார். கட்டி முடியால் உருவாகியிருப்பதும் தெரிய வந்தது. இந்நோய்க்கு மருத்துவத் துறை Rapunzel Syndrome என்று அழைக்கிறார்கள். அறுவை சிகிச்சைக்கு பிறகு, சிறுமி, மனநல மருத்துவரிடம் ஆலோசனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் விழுப்புரம் ஆட்சியர் மோகனுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சிறுமிக்கு அளிக்கப்பட்ட மனநல ஆலோசனைகள், அதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 7 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
Comments