தமிழ்நாட்டில் அமலில் உள்ள ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அறிவிக்கப்படுமா? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை
தமிழ்நாட்டில் 5ம் தேதி வரை அமலில் உள்ள ஊரடங்கை நீட்டிப்பது குறித்தும் கூடுதலான தளர்வுகளை அறிவிப்பது குறித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் மூன்று வகையாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. பாதிப்பு குறைவாக காணப்பட்ட சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கூடுதலான தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.
பேருந்து சேவைகளும் தொடங்கின.இதனை 23 மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டதையடுத்து தமிழகத்தின் 27 மாவட்டங்களில் இயல்பு நிலை திரும்பியுள்ளது.
பாதிப்பு அதிகமுடைய 11 மாவட்டங்களிலும் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்தது. இந்த தளர்வுகள் வரும் 5ம் தேதி காலையுடன் முடிய உள்ள நிலையில் ஊரடங்கை மேலும் நீட்டிப்பது குறித்தும் கூடுதல் தளர்வுகள் வழங்குவது குறித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மற்றும் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள், காவல்துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்டோருடன் இன்று ஆலோசனை நடத்துகிறார் .
கட்டுப்பாடுகள் அதிகமுள்ள 11 மாவட்டங்களில் கோவில்கள், ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள் திறக்க அனுமதியளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுப் போக்குவரத்துக்கும் அரசு அனுமதி அளிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. படப்பிடிப்புகளுக்கு அனுமதிக்கப்பட்ட போதும் இன்னும் திறக்கப்படாத திரையரங்குகளை திறப்பது குறித்தும் அரசு விரைவில் முடிவெடுக்கக்கூடும்.
தேநீர் கடைகள் மற்றும் உணவகங்களில் அமர்ந்து உண்ணும் வசதி. மெரீனா உள்ளிட்ட கடற்கரைகளில் முழு நேரம் மக்களுக்கு அனுமதி போன்றவையும் அரசின் பரிசீலனையில் உள்ளதாக கூறப்படுகிறது.
Comments