காப்பக அபலைகளிடம் குழந்தை மோசடி, அறக்கட்டளை நிர்வாகி உள்ளிட்ட 5 பேர் கைது : குழந்தைகளை வாங்கிய 2 தம்பதிகளும் கைது
காப்பகத்தில் அடைக்கலமான அபலைத் தாய்மார்களிடம் கொரோனாவால் குழந்தைகள் உயிரிழந்துவிட்டதாக நாடகமாடி, அந்த குழந்தைகளை விற்று காசு பார்த்து வந்த, மதுரை இதயம் அறக்கட்டளை நிர்வாகி மற்றும் விலைக்கு வாங்கிய தம்பதிகள் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரையில் இயங்கி வந்த இதயம் அறக்கட்டளை காப்பகத்தில் ஆதரவற்ற பெண்கள் தங்கியிருந்தனர். இதில் ஐஸ்வர்யா என்ற பெண்ணின் ஒரு வயது ஆண் குழந்தையும், ஸ்ரீதேவி என்ற பெண்ணின் 2 வயது பெண் குழந்தையும், கொரோனாவால் உயிரிழந்ததாக தாய்மார்களிடம் கூறிவிட்டு, போலி ஆவணங்களை தயாரித்து பல லட்சம் ரூபாய்க்கு விற்றது, அறக்கட்டளை நிர்வாகி கலைவாணியிடம் நடத்திய விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த குழந்தைகளை, விலைக்கு வாங்கிய தம்பதிகளிடம் இருந்து மீட்ட போலீசார், இதயம் அறக்கட்டளைக்கு சீல் வைத்தனர்.
காப்பக ஒருங்கிணைப்பாளர் கலைவாணியையும், ஆண் குழந்தையை 5 லட்சம் ரூபாய்க்கு விலைக்கு வாங்கிய நகைக்கடை அதிபர் கண்ணன், அவரது மனைவி பவானியையும் போலீசார் கைது செய்தனர். இதேபோல பெண் குழந்தையை 3 லட்ச ரூபாய்க்கு வாங்கிய, எவர்சில்வர் பட்டறை தொழிலாளி சகுபர் சாதிக், அவரது மனைவி ராணி ஆகியோரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
கமிஷன் வாங்கிக் கொண்டு குழந்தைகளை விற்க இடைத்தரகர்களாக செயல்பட்ட செல்வி மற்றும் ராஜா ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 7 பேரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
10 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படும் இதயம் அறக்கட்டளை காப்பகத்தில் வேறு ஏதேனும் குழந்தைகள் முறைகேடாக விற்கப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை தீவிரமடைந்துள்ளது. காப்பகத்திலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட கணினியின் ஹார்ட் டிஸ்க் சைபர் கிரைம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தேடப்படும் இதயம் அறக்கட்டளை உரிமையாளர் சிவக்குமாரும், நிர்வாகி மதார்ஷாவும் சென்னையில் பதுங்கியிருப்பது, செல்போன் சிக்னல் மூலம் தெரியவந்துள்ளதால், அவர்களை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர். சிவக்குமாரின் தனிப்பட்ட வங்கி கணக்குகள், அறக்கட்டளையின் கீழ் உள்ள வங்கி கணக்குகளை முடக்கப்பட்டுள்ளன.
இதனிடையே, தமிழ்நாட்டில் உள்ள குழந்தைகள் காப்பகம், முதியோர் இல்லங்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்ய ஆட்சியர்கள், அதிகாரிகள் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் உத்தரவிட்டுள்ளார்.
உரிய உரிமங்கள் பெற்றுள்ளதா? என்பதை இரண்டு வாரங்களுக்குள் கள ஆய்வு மேற்கொண்டு அறிக்கை அளிக்க அமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Comments