நாடு முழுவதும் 3 லட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய மின் திட்டங்கள் - மத்திய அமைச்சரவை ஒப்புதல்
நாடு முழுவதும் மின்பகிர்மானத் திட்டங்களுக்கு 3 லட்சத்து 3 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளித்துள்ளது.
புதுப்பிக்கப்பட்ட மின் விநியோகத் திட்டம் குறித்து பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசனை நடைபெற்றது. இதில், ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிர்மலா சீதாராமன், ஹர்ஷ்வர்தன் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர்.
சீர்திருத்தங்களின் அடிப்படையில் மின் பகிர்மானம் சார்ந்த திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக 3 லட்சத்து 3 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை ஒதுக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புக் கொண்டுள்ளது.
மக்கள் மின் கட்டணம் செலுத்த ரீசார்ஜ் முறை கொண்டு வர இத்திட்டம் வழிவகுக்கும். விவசாயிகளுக்குத் தடையற்ற மின்சாரம் வழங்கவும், புதிய மின்பாதைகள் மற்றும் புதிய துணை மின்நிலையங்கள் அமைப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ள அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் பாரத் நெட் திட்டத்தின்கீழ் 16 மாநிலங்களின் கிராமங்களை மின்பாதைகளின் மூலம் இணைக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட துறைகளின் கடன் உத்திரவாத திட்டம், அவசரகால கடன் உத்திரவாத திட்டம் தொகுப்பை அதிகரிக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
Comments