தாயின் மோதிரத்தை எடுத்து விழுங்கிய தங்கப்பாப்பா..! நவீன முறையில் மீட்ட மருத்துவர்கள்

0 5001

தாயின் கைவிரலில் இருந்து கழண்டு விழுந்த அரைபவுன் தங்க மோதிரத்தை எடுத்து 2 வயது பெண் குழந்தை விழுங்கிய விபரீத சம்பவம் சிவகங்கையில்  நிகழ்ந்துள்ளது. குழந்தையின் உணவுக்குழாயில் சிக்கிய  தங்க மோதிரத்தை  எண்டாஸ்கோப்பி முறையில், வாய் வழியாக மீட்டு மருத்துவர்கள் குழந்தையை காப்பாற்றி உள்ளனர்.

சிவகங்கை சண்முகராஜா தெருவை சேர்ந்த ராம்பிரசாத் - நிரஞ்சனா தம்பதியரின் இரண்டு வயது பெண் குழந்தை மதிமாலா தான் தங்க மோதிரத்தை விழுங்கிய சுட்டிப்பாப்பா..!

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்த தாய் நிரஞ்சனாவின் கை விரலில் இருந்த 4 கிராம் தங்க மோதிரம் கழண்டு கீழே விழுந்துள்ளது. இதை கவனிக்க தாய் மறந்துவிட்ட நிலையில் அதனை எடுத்த குழந்தை மதிமாலா விழுங்கியதுடன் தன் தாயிடம் தொண்டையில் மோதிரம் சிக்கிக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து பதறிப்போன பெற்றோர் உடனடியாக குழந்தை மதிமாலாவை சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். மருத்துவர்கள் உடனடியாக குழந்தைக்கு எக்ஸ்ரே எடுத்து பார்த்தபோது குழந்தை விழுங்கிய மோதிரம் உணவுக்குழாயில் சிக்கியிருப்பதை கண்டுபிடித்தனர்.

உடனடியாக மயக்கவியல் மருத்துவர் உதவியுடன் குழந்தையின் உணவுக்குழாயில் சிக்கி உள்ள தங்க மோதிரத்தை எடுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. நவீன எண்டோஸ்கோப்பி முறையில் வாய்வழியாக கேமராவுடன் கூடிய நுண்ணிய கம்பியால் உணவுக்குழாயில் சிக்கியிருந்த மோதிரத்தை வெளியே எடுத்து குழந்தையின் உயிரை காப்பாற்றியுள்ளனர்.

தங்களது கவனகுறைவால் நிகழ்ந்த சம்பவத்தில் மோதிரத்தை விழுங்கிய தனது குழந்தையின் உயிரை காத்த மருத்துவர்களுக்கு குழந்தையின் பெற்றோர் நன்றி தெரிவித்துக் கொண்டனர்

கீழே கிடக்கும் பொருட்களை எடுத்து, சின்ன சிறு குழந்தைகள் வாயில் வைக்கும் அளவுக்கு கவனக்குறைவாக இருப்பதை பெற்றோர் தவிர்க்க வேண்டும். இதே அந்த குழந்தை விழுங்கியது கடினமான வேறு பொருளாக அதனை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டிருக்கும் , அதனால் குழந்தையின் உயிருக்கும் ஆபத்தாகி இருக்கும் என்று எச்சரித்துள்ள மருத்துவர்கள், தாய்மார்களுக்கு வீட்டில் பல வேலைகள் இருந்தாலும் தங்கள் குழந்தைகளின் ஒவ்வொரு செயலையும் கவனமாக கண்காணிக்க வேண்டியதும் அவசியம் என்று அறிவுறுத்துகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments