கல்விக் கடன் பெறுவது எப்படி? முழு விவரம்

0 21718

பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கப்பட உள்ள நிலையில், உயர்கல்வி படிக்க உள்ள மாணவர்கள் கல்விக்கடன் பெறுவது எப்படி என்பதை விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு...

பிளஸ் 2 முடித்த மாணவர்கள் பலரும் போதிய பணம் இல்லாத காரணத்தால் விரும்பிய படிப்பை படிக்க முடியாமல் குறைவான கட்டணத்தில் கிடைக்கும் ஏதோ ஒரு படிப்பை படிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விடக்கூடாது என்பதற்காக கல்விக்கடன் வழங்கப்படுகிறது.

கல்வி கடன் பெற முன்புபோல வங்கிக்கு நேரடியாக செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இதற்காகவே பிரத்தியேகமாக மத்திய அரசின் "Vidya Lakshmi Portal" இயங்கி வருகிறது. அதில், மாணவர்கள் தங்கள் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள ஏதாவது 3 வங்கிகளை அதில் தேர்வு செய்து விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பத்தின் நிலை குறித்தும் அதே இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம். குடும்பத்தில் உள்ள வேறு எந்தக் கடனும் கல்வி கடன் பெறுவதை பாதிக்காது. UGC-ன் அங்கீகாரம் பெற்ற அனைத்து படிப்புகளுக்கும் கல்விக் கடன் வழங்கப்படுகிறது.

ஏழரை லட்சம் ரூபாய் வரை, ஏழரை லட்சத்திற்கும் மேல் என இரண்டு வகைகளில் கடன் வழங்கப்படுகிறது.
ஏழரை லட்சத்திற்குள் கடன் பெறுபவர்களுக்கு அடமானம் ஏதும் தேவையில்லை. அதற்கு மேல் கடன் பெறுபவர்களுக்கு மட்டும் அசையும் அல்லது அசையா சொத்து ஆவணங்களை அடமானமாக கொடுக்க வேண்டும். ஏழரை லட்சம் ரூபாய் வரை கல்வி கடன் பெற்றவர்கள் படிக்கும் காலத்திலும், படித்த பிறகு ஓராண்டு காலத்திற்கும் செலுத்த வேண்டிய வட்டியை, மானியத் தொகையாக வங்கிகளுக்கு அரசே செலுத்தி விடும்.

7 லட்சத்து 50 ஆயீரம் ரூபாய் வரை கல்வி கடன் பெற பெற்றோரின் கையொப்பம் மட்டுமே போதுமானது. மாறாக ஆவணம் அல்லது மூன்றாம் நபரின் கையெழுத்து சமர்ப்பித்தால் வட்டி மானியம் கிடைக்காது. எனவே மாணவர்கள் இதில் மிக கவனமாக இருக்க வேண்டியது அவசியம்..

நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கும் கடன் உதவி கிடைக்கும், ஆனால் வட்டி மானியம் கிடைக்காது. மாணவர்கள் பெற்ற கல்விக்கடனை 15 ஆண்டுகள் வரை தவணை முறையில் செலுத்த அவகாசம் வழங்கப்படுகிறது. கல்லூரி விடுதி, ஆய்வுக்கூடம், வெளிநாட்டுக்கான பயணச்செலவு, உபகரணங்கள், சீருடை, மடிகணினி ஆகியவற்றுக்கு தேவையான செலவையும் கூட சேர்த்து கல்விக் கடன் பெற முடியும்.

கல்விக்கடன் பெற பான் கார்டு, ஆதார் கார்டு, இருப்பிட மற்றும் வருமானவரி சான்று ஆகியவை கட்டாயம் தேவை. எனவே உயர்கல்வியில் சேர திட்டமிட்டுள்ள மாணவர்கள், இவற்றை முன்கூட்டியே முறையாக விண்ணப்பித்து பெற்று வைத்துக் கொள்வது நல்லது.

கல்விக் கடன் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் முதல் கட்டமாக மண்டல மேலாளரிடம் புகார் தெரிவிக்கலாம். உரிய காரணங்கள் இருந்தால் மட்டுமே விண்ணப்பத்தை நிராகரிக்க முடியும். விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட வங்கி மாணவருக்கு கடன் அளிப்பது அல்லது நிராகரிப்புக்கு தகுந்த பதிலை சொல்ல வேண்டும் என்பது விதிமுறையாகும். உரிய பதில் ஏதும் கிடைக்காத பட்சத்தில் மத்திய அரசின் இணைய தளமான pgportal.gov.in என்ற இணையதளத்தில் புகார் தெரிவித்தால் விரைவில் உரிய பதில் கிடைக்கும் என்கிறார் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி ஸ்ரீநிவாசன்.

தேசிய அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் படித்தால் மட்டுமே வட்டி மானியம் கிடைக்கும் என்பதால், மாணவர்கள் கல்லூரி மற்றும் படிப்புகளை தேர்வு செய்யும் முன் கவனமாக செயல்பட வேண்டும் எனவும் கல்வியாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments