ஆதரவற்றோர் இல்லமா? உறுப்புகளைத் திருடும் மையமா ? அதிரவைக்கும் மர்மங்கள்

0 5819

துரையில் ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்க்கப்பட்ட ஒரு வயது குழந்தை கொரோனாவால் இறந்துவிட்டதாக போலியான ஆவணங்களைத் தயார் செய்து குழந்தையின் தாயாரை நம்பவைத்து நாடகமாடிய இல்லத்தின் நிர்வாகியை போலீசார் தேடி வருகின்றனர். ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்த பலர் மர்மமான முறையில் இறந்துவிட்டதாக பதிவாகி இருப்பது தெரியவந்துள்ளதால், போலீசாரின் விசாரணை தீவிரமடையத் தொடங்கியுள்ளது.

மதுரை ரிசர்வ் லைன் காவலர் குடியிருப்பு பகுதியில் இயங்கிவரும் “இதயம் முதியோர், ஆதரவற்றோர் இல்லத்தினை” இதயம் அறக்கட்டளையின் நிறுவனரான சிவகுமார் என்பவர் நடத்தி வருகிறார். சாலையோரத்தில் சுற்றித் திரியும் நூற்றுக்கணக்கானோரை மீட்டு இங்கு பராமரித்து வருவதாக கூறப்பட்டு வந்தது. மதுரை சேக்கிப்பட்டியைச் சேர்ந்த ஐஸ்வர்யா என்ற பெண்ணின் கணவர் உயிரிழந்த நிலையில், அவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டு 3 குழந்தைகளுடன் தவித்து வந்துள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த அசாருதீன் என்பவர் அவரை மீட்டு, 4 மாதங்களுக்கு முன் இந்த இதயம் ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 11ஆம் தேதி ஐஸ்வர்யாவின் ஒரு வயது குழந்தையான மாணிக்கத்துக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு, நரிமேடு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் செல்வதாக காப்பகத்தைச் சேர்ந்தவர்கள் ஐஸ்வர்யாவிடம் கூறியுள்ளனர். ஒரு வாரம், இரண்டு வாரம் என கழிந்த நிலையில் குழந்தை மீண்டும் காப்பகத்துக்கு வந்து சேரவில்லை.

குழந்தை குறித்து கேட்ட ஐஸ்வர்யாவிடம் கொரோனா பாதித்து குழந்தை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளனர். 16 நாட்கள் கடந்த நிலையில், திடீரென கடந்த 28ஆம் தேதி ஐஸ்வர்யாவிடம் குழந்தை மாணிக்கம் கொரோனாவால் உயிரிழந்துவிட்டதாகவும் தத்தனேரி மயானத்தில் புதைத்துவிட்டதாகவும் கூறியுள்ளனர். ஐஸ்வர்யாவையும் அங்கு அழைத்துச் சென்று இறுதிச் சடங்குகளை செய்ய வைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டு வந்துள்ளனர்.

இந்த விவகாரம் ஐஸ்வர்யாவை காப்பகத்தில் சேர்த்துவிட்ட அசாருதீனுக்குச் சென்றுள்ளது. கொரோனாவால் குழந்தை இறந்ததாகக் கூறியதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர், நரிமேடு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் மதுரை ராஜாஜி மருத்துவமனையிலும் விசாரித்துள்ளார். அவர்கள் அப்படி ஒரு குழந்தை சிகிச்சைக்கு வரவே இல்லை எனக் கூறியதும், நரிமேடு சுகாதார நிலையத்தில் குழந்தையை சேர்த்ததற்கான ஆவணம், அங்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, குழந்தை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதற்கான ஆவணம், குழந்தையை தத்தனேரி மயானத்தில் புதைத்தற்கான ஆவணம் உள்ளிட்டவற்றை காப்பகத்தினரிடம் கேட்டுள்ளார். அவர்களும் ஆவணங்கள் அனைத்தையும் சளைக்காமல் அனுப்பியுள்ளனர்.

ஆய்வில் ஆவணங்கள் அனைத்தும் போலி என்பது தெரியவந்தது. இதனையடுத்து அசாருதீன் போலீசில் புகாரளித்தோடு, மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கும் கொண்டு சென்றார். உடனடியாக மாவட்ட குழந்தைகள் நல அலுவலர், வட்டாட்சியர், போலீசார் என விசாரணை தீவிரமடைந்தது. இதனால், இதயம் அறக்கட்டளையின் நிறுவனர் சிவக்குமார் தலைமறைவானார்.

முதற்கட்ட விசாரணையில் இதயம் அறக்கட்டளையும் ஆதரவற்றோர் இல்லமும் உரிய அனுமதியின்றி இயங்கி வந்தது தெரியவந்தது. அங்குள்ள பதிவேட்டை ஆய்வு செய்தபோது, காப்பகத்தில் சேர்க்கப்பட்ட பலர் மர்மமான முறையில் இறந்திருப்பதும் தெரியவந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக, தத்தனேரி மயானத்தில் புதைக்கப்பட்டது குழந்தை மாணிக்கமே இல்லை என்பதும், 2 நாட்களுக்கு முன் இறந்துபோன வேறொரு குழந்தையின் சடலம் என்பதும் தெரியவந்தது.

நரிமேடு ஆரம்ப சுகாதார நிலையம் செல்லாத, அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படாத, தத்தனேரி மயானத்திலும் புதைக்கப்படாத மாணிக்கம் என்ற அந்தக் குழந்தை என்ன ஆனது என்பதுதான் போலீசாரின் முன் நிற்கும் கேள்வியாக உள்ளது.

தலைமறைவாக உள்ள காப்பகத்தின் நிறுவனர் சிவக்குமார் பிடிபட்டால் மட்டுமே இந்த மர்ம முடிச்சுகள் அவிழும் என்று போலீசார் கூறுகின்றனர். மாயமானவர்களின் உடல் உறுப்புகளை எடுத்து விற்பனை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments