நீட் தேர்வை நடத்தியே ஆக வேண்டும் என்கிற உச்சநீதிமன்ற உத்தரவை செல்லாமல் ஆக்கும் அதிகாரம் நீதிபதி ராஜன் குழுவுக்கு உள்ளதா? சி.வி.சண்முகம் கேள்வி
தமிழகத்தில் நீட் தேர்வு இல்லாத போது ஆண்டுக்கு சராசரியாக ஏழு பேர் என்கிற அளவில் தான் அரசுப் பள்ளி மாணவர்களால் எம்பிபிஎஸ் படிப்பில் சேர முடிந்ததாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
அதே போல் நீட் தேர்வை நடத்த வேண்டும் என்கிற உச்சநீதிமன்ற தீர்ப்பை செல்லாமல் ஆக்கும் அதிகாரம் தமிழக அரசின் ராஜன் குழுவுக்கு உள்ளதா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், தமிழகத்தில் நீட் தேர்வு தாக்கம் குறித்து ஆராய ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டினார்.
நீட் தேர்வை நடத்த வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவை செல்லுபடி இல்லாமல் ஆக்கும் அதிகாரம் தமிழக அரசு அமைத்துள்ள ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவுக்கு இருக்கிறதா என அவர் கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர், 2006-ல் திமுக ஆட்சிக்கு வந்த போது மருத்துவப் படிப்புக்கான போட்டித் தேர்வை ரத்து செய்தது எனவும், 2007-ம் ஆண்டு முதல் 2017 வரை 10 ஆண்டுகளில் போட்டித் தேர்வுகள் இல்லாமல் நேரடியாக பிளஸ் 2 மதிப்பெண் மூலம் வெறும் 74 அரசுப் பள்ளி மாணவர்கள் மட்டுமே மருத்துவப் படிப்பில் சேர்ந்ததாகவும் புள்ளி விபரங்களுடன் பட்டியலிட்டார்.
Comments