ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்த குழந்தை கொரோனாவால் உயிரிழப்பு என நாடகம்?
மதுரையில் ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்த ஒரு வயது குழந்தை கொரோனாவால் உயிரிழந்ததாக கூறி போலி ஆவணங்கள் மூலம் புதைத்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதயம் ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட ஐஸ்வர்யா என்பவரின் ஒரு வயது குழந்தை மாணிக்கத்திற்கு கடந்த 11ஆம் தேதி கொரோனா தொற்று ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், திடீரென குழந்தை இறந்துவிட்டதாக கூறி தாய் ஐஸ்வர்யா முன்னிலையில் மயானத்தில் புதைத்துள்ளனர்.
இதனையறிந்த ஐஸ்வர்யாவை இல்லத்தில் சேர்த்துவிட்ட சமூக ஆர்வலர், குழந்தை குறித்து தொண்டு நிறுவனத்திடம் கேட்டபோது முறையாக பதிலளிக்காத நிலையில் குழந்தையை புதைத்தது தொடர்பான ஆவணங்கள் போலியாக இருந்தது கண்டறியப்பட்டது.
மேலும், ஆதரவற்றோர் இல்லத்தின் நிறுவனர் சிவக்குமார் தலைமறைவாக உள்ள நிலையில் கொரோனா பாதித்த குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்படாமல் இருந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதற்கிடையே சட்டவிரோதமாக குழந்தை விற்க்கப்பட்டுவிட்ட நிலையில் உயிரிழந்துவிட்டதாக நாடகம் நடத்தப்படுகிறதா என்ற கோணத்திலும் குழந்தை நல அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments