முகநூலில் மூழ்கிய தங்கையை வெட்டிக் கொன்ற அண்ணன்..! வாட்ஸ்அப் பழக்கம் சுடுகாடு மட்டும்..!
தூத்துக்குடி அருகே, முகனூலில் மூழ்கிக்கிடந்த தனது தங்கையை அண்ணனே அரிவாளால் வெட்டிக் கொன்ற சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
ஆன்லைனில் கல்வி கற்பதற்காக, பட்டணம் முதல் பட்டிக்காடு வரை எல்லோர் கையிலும் ஸ்மார்ட் போன் வந்தாலும் வந்தது, வீதியில் சென்ற வில்லங்கம் கூட வீடுதேடி வந்து கொண்டிருக்கின்றது.
அந்தவகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் சமூக வலைதளங்களில் மூழ்கி கிடந்த பிளஸ் டூ மாணவி ஒருவர் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட அதிர்ச்சிக்குரிய சம்பவம் நடந்திருக்கின்றது.
வல்ல நாடு அடுத்த வசவப்புரம் பசும்பொன் நகரைச் சேர்ந்த சுடலை என்பவரின் மகன் மாலைராஜா. இவரது சகோதரி கவிதாவுக்கு 12 ஆம் வகுப்பு ஆன்லைனில் கல்வி கற்பதற்காக ஸ்மார்ட் போன் ஒன்றை வாங்கிக் கொடுத்திருந்தனர்.
அவர் பிளஸ் டூ தேர்வான நிலையில் அந்த ஸ்மார்ட் போனில் முகநூல், வாட்ஸ் அப் என சமூக ஊடகங்களில் நண்பர்களுடன் சாட்டிங்கிலும், ஆன் லைன் விளையாட்டுகளிலும் தீவிரம் காட்டியுள்ளார்.
வீட்டில் உள்ளவர்கள் பலமுறை எச்சரித்தும் கேட்காமல் முகநூலிலும், வாட்ச் அப்பிலும் மூழ்கி கிடந்த கவிதாவை அவரது சகோதரர் மாலை ராஜா கண்டித்துள்ளார். ஆனால் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாத கவிதா, தொடர்ந்து நண்பர்களுடன் சாட்டிங் மற்றும் ஆன்லைன் விளையாட்டுக்களில் தீவிரமாக இருந்துள்ளார்.
இந்த நிலையில் செவ்வாய்கிழமை மாலையும் இதே போல ஸ்மார்ட் போனில் மெய்மறந்து விளையாடிய கவிதாவை , அவரது சகோதரர் கண்டித்தபோது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்றியதால், ஆத்திரமடைந்த மாலைராஜா , வீட்டில் இருந்த வீச்சரிவாளை எடுத்து தங்கை என்றும் பாராமல் கவிதாவை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் உடலில் 10 இடங்களில் வெட்டு விழுந்ததால் சம்பவ இடத்திலேயே கவிதா பரிதாபமாக பலியானார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்தும் விரைந்து வந்த மாவட்ட காவல் கண்கணிப்பாளர் ஜெயகுமார் உத்தரவின் பேரில் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்திய தனிப்படை போலீசார் வல்ல நாடு மலைப்பகுதியில் பதுங்கி இருந்த மாலை ராஜாவை கைது செய்தனர்.
படிப்பை மறந்து ஆன் லைன் விளையாட்டுக்களிலும், முகநூல் மற்றும் வாட்ஸ் அப் சாட்டிங்கிலும், முழு நேரத்தையும் செலவிட்டதால் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
சமூக வலைதளங்களை பயன்படுத்துவது தற்போது சர்வசாதாரணமாகிவிட்ட சூழலில் அதற்காக மாணவி ஒருவர் கொல்லப்பட்டிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Comments