அரசு நிலத்தை ஆக்கிரமித்து, அதனை அரசுக்கே விற்ற விவகாரம் ; ரூ.200 கோடி மதிப்பிலான 36.23 ஏக்கர் அரசு நிலம் மீட்பு
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் மோசடியாக பட்டா பெறப்பட்டு அரசுக்கே விற்கப்பட்ட 200 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நிலம் மீட்கப்பட்டுள்ளது.
சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைப் பணிக்காக நில ஆர்ஜிதம் செய்யும் பணியின் போது, மேவாளூர் குப்பம் கிராமத்தில் அரசுக்குச் சொந்தமான 36 ஏக்கர் நிலம் மோசடியாகப் பட்டா பெற்று ஆக்கிரமிப்பில் இருந்ததும் பின்னர் அது நெடுஞ்சாலைத்துறைக்கே விற்கப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக ஆசிஷ் ஜெயின் என்ற நபர் உட்பட அன்றைய தேதியில் வருவாய்த்துறையில் பணியாற்றிய அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மோசடிப் பட்டா மூலம் 200 கோடி ரூபாய் வரை இழப்பீடு பெற்ற 83 பேரின் வங்கிக்கணக்குகளும் முடக்கப்பட்டன.
இந்த நிலையில், மோசடியாகப் பெற்ற பட்டாக்களை ரத்து செய்த அதிகாரிகள், இது அரசுக்குச் சொந்தமான இடம் என்ற அறிவிப்புப் பலகையை சம்மந்தப்பட்ட நிலத்தில் நட்டு வைத்தனர்.
Comments