தமிழக காவல்துறையின் புதிய டிஜிபியாக சைலேந்திர பாபு நியமனம்..!
தமிழக காவல்துறையின் சட்டம் ஒழுங்கு புதிய டிஜிபியாக சைலேந்திர பாபு நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக டிஜிபி திரிபாதி புதன்கிழமைடன் பணி ஓய்வு பெற உள்ள நிலையில் புதிய டிஜிபியாக சைலேந்திர பாபுவை நியமித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஜூலை ஒன்றாம் தேதி பொறுப்பேற்க இருக்கும் புதிய டிஜிபி சைலேந்திர பாபு, கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் 1962-ஆம் ஆண்டு ஜூன் 5-ஆம் தேதி பிறந்தவர்.
தமிழ்நாடு காவல்துறையின் 1987ஆம் ஆண்டு பேட்ச் அதிகாரி ஆவார். மதுரை வேளாண் ஆராய்ச்சி கல்லூரியில் இளங்கலை படிப்பை முடித்து, பின் ஐபிஎஸ் தேர்வில் வெற்றி பெற்றவர். கடலூர், காஞ்சிபுரம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி இருக்கிறார். சென்னை அடையாறு துணை ஆணையர் உள்ளிட்ட உயர் பதவிகளிலும் திறம்பட பணியாற்றியவர் சைலேந்திர பாபு.
லஞ்ச ஒழிப்புத்துறை, சிறைத்துறை, தீயணைப்புத்துறை, கடலோர பாதுகாப்பு குழுமம் ஆகியவற்றிலும் பணியாற்றியவர். தீயணைப்பு துறையின் இயக்குனராக பொறுப்பு வகித்த போது, 2015 ஆம் ஆண்டு சென்னை பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் தீயணைப்பு துறை வீரர்களுடன் களமிறங்கி துணிச்சலுடன் மீட்பு பணியில் ஈடுபட்டார்.
"நீங்களும் ஐபிஎஸ் ஆகலாம்" என்ற சைலேந்திர பாபுவின் புத்தகம், இளையோரின் ஐபிஎஸ் கனவை தூண்டி கவனம் ஈர்த்தது. புத்தக வாசிப்பு, ஊக்குவிக்கும் வகையில் பேச்சு என இளைஞர்களை கவர்ந்தவர். காவல்துறையில் இவரது பணியை பாராட்டி, குடியரசு தலைவர் விருது, பிரதமர் விருது, தமிழ்நாடு முதலமைச்சர் விருது மற்றும் பதக்கங்களை பெற்றுள்ளார்.
Comments