தேங்காய்பட்டினம் துறைமுக முகத்துவாரத்தில் அலையின் வீச்சில் நிலைதடுமாறி கவிந்த விசைப்படகு..! 3 மீனவர்கள் உயிருக்குப் போராடும் காட்சிகள் வெளியீடு
கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டினம் துறைமுக முகத்துவாரத்தில் நுழையும் பைபர் படகு ஒன்று, அலையின் வீச்சில் நிலைதடுமாறி, எதிர்திசையில் திரும்பி தலைகீழாகக் கவிழும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
படகிலிருந்து கடலில் விழுந்த 3 மீனவர்கள் உயிருக்குப் போராடிய காட்சிகளும் பதிவாகியுள்ளன. கடலில் இருந்து கரையை நோக்கி வந்து கொண்டிருந்த போது முகத்துவாரத்திற்கு அருகே நிலை தடுமாறிய படகு அலைக்கு இணையான திசையில் திரும்பியதால் பக்கவாடடில் அலைகள் மோதி படகை கவிழ்த்தன.
தேங்காய்பட்டினம் துறைமுக முகத்துவாரப் பகுதி முறையாக ஆழப்படுத்தப்படாமலும் துறைமுக கட்டுமானம் திட்டமிடப்படாமலும் அமைக்கப்பட்டதாக மீனவர்கள் பல ஆண்டுகளாக குற்றம்சாட்டி வருகின்றனர்.
இதனால் முகத்துவாரத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி கடந்த ஓராண்டில் மட்டும் 5க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக அவர்கள் கூறுகின்றனர். எனவே முகத்துவார பகுதியை ஆழப்படுத்த நிரந்தரமாக மணல் அள்ளும் இயந்திரம் அமைக்க வேண்டும் என்றும் அவர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
Comments