குடியிருக்க வீடு இல்லாமல் தவிக்கும் சூப்பர் ஸ்டார் பேரன்..! வீடு கேட்டு முதல்வரிடம் மனு

0 9515
குடியிருக்க வீடு இல்லாமல் தவிக்கும் சூப்பர் ஸ்டார் பேரன்..! வீடு கேட்டு முதல்வரிடம் மனு

மிழ் திரைஉலகின் முதல் சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்பட்ட எம்.கே.தியாகராஜ பாகவதரின், மகள் வழி பேரன் வசிக்க வீடின்றி தவிப்பதாகக் கூறி, வீட்டு வசதித்துறை மூலம் வீடு ஒதுக்கீடு செய்யக் கோரி முதலமைச்சரின் தனி பிரிவில் மனு அளித்துள்ளார். பன்னீரில் குளித்து தங்கத்தட்டில் சாப்பிட்ட எம்.கே.டி.யின் பேரனுக்கு நேர்ந்த பரிதாப நிலை குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.

வெள்ளிக்கிழமை ரிலீசாகும் படத்திற்கு ஞாயிற்றுக்கிழமை சக்ஸஸ் மீட் நடத்தும் தற்போதைய தமிழ்த் திரையுலகினர் மத்தியில், 1944 ஆம் ஆண்டு தீபாவளிக்கு ரிலீசான ஹரிதாஸ் படம் 1945, 1946 என்று மூன்று தீபாவளிகள் வரை ஹவுஸ் புல் காட்சிகளாக ஓடக் காரணமானவர் தமிழ் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார் எம்.கே.தியாகராஜ பாகவதர்.

அவரே பாடி நடித்ததால் அன்றைய காலக்கட்ட சூப்பர் ஸ்டாராக ரசிக்கப்பட்ட எம்.கே.டி பாகவதரின் நடிப்பில் வெளியான அம்பிகாபதி, திருநீலகண்டர், அசோக்குமார், சிவகவி என படங்கள் ஒவ்வொன்றும் மாதக்கணக்கில் ஓடி வசூலை வாரிக்குவித்தவை.

இதனால் பிரமாண்ட பங்களாவில் குடியேறி பன்னீரில் குளித்து, தங்கத்தட்டில் சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருந்த பாகவதருக்கு இரு மனைவிகள். அள்ளிக்கொடுக்கும் வள்ளலாக திகழ்ந்த பாகவதர், தன்னை பற்றி கிசு கிசு எழுதிய லட்சுமிகாந்தன் என்ற பத்திரிகையாளர் கொலை வழக்கில் சிக்கி புகழை இழந்ததோடு, வீண் ஆடம்பரத்தால் வறுமையின் பிடியில் சிக்கினார். நோயால் பாதிக்கப்பட்ட பாகவதர் தனது 49 வது வயதில் சென்னை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.

பாகவதரின் முதல் மனைவி குடும்பத்தினர் நல்ல நிலையில் வசித்து வரும் நிலையில், துணைவி ராஜம்மாளின் குடும்பம் போதிய வருமானமில்லாமல், இருக்க வீடு கூட இல்லாமல் கடுமையான வறுமையில் சிக்கி தவித்து வருகின்றது. அந்தவகையில் கணவனை இழந்த அவரது மகள் அமிர்தலட்சுமியின் மகன் சாய்ராம் தனக்கு அரசு மூலம் ஏதாவது உதவி கிடைக்குமா என்ற ஏக்கத்தில் சென்னை தலைமை செயலகத்துக்கு வந்திருந்தார். தியாகராஜ பாகவதரின் மகள் வழி பேரனான சாய்ராம், முதலமைச்சரின் தனி பிரிவில் தங்களுக்கு ஒரு வீடு ஒதுக்கக்கோரி மனு ஒன்றை அளித்தார்.

பாட்டி ராஜம்மாள் மறைவுக்கு பின்னர் தங்கள் குடும்பம் வறுமையின் உச்சத்துக்கு சென்றுவிட்டதாக கூறிய சாய்ராம், அவ்வப்போது நடிகர் சிவக்குமார், சூர்யா உள்ளிட்டோர் தங்கள் பிள்ளைகளின் படிப்புக்கு உதவி வருவதாகவும், தனது கோரிக்கையை ஏற்று அரசு வீடு ஒதுக்கும் பட்சத்தில் அனைவரும் அந்த வீட்டில் வசிக்க ஏதுவாக இருக்கும் என கூறினார்.

இதற்கிடையே தியாகராஜ பாகவதர் தங்கள் சாதியை சேர்ந்தவர் என்று உரிமை கொண்டாடி அவரது கையில் வீச்சரிவாளை கொடுத்து, பழகிபார் பாசம் தெரியும், பகைத்துப்பார் வீரம் புரியும் என்று டெம்ப்லெட்டுகளால் கொண்டாடி வருகின்றது

கடந்த ஒரு வருடமாக மக்களை அச்சுறுத்திவரும் கொரோனா ஊரடங்கால், முன்னாள் சூப்பர்ஸ்டார் குடும்பம் மட்டுமல்ல, தமிழகத்தில் சுமாரான குடும்பங்கள் கூட வீட்டுவாடகை கொடுக்க இயலாமல் தவித்து வருவது குறிப்பிடதக்கது..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments