வங்கி அதிகாரி போல் பேசி பணம் சுருட்டல்.... தொடரும் ஆன்லைன் மோசடி..!
புதுச்சேரியில் வங்கியில் இருந்து பேசுவதாகக் கூறி, பள்ளி தலைமை ஆசிரியர் மனைவியின் கணக்கு விவரங்களைக் கைப்பற்றி, 9 லட்ச ரூபாய் வரை மர்ம நபர் திருடியுள்ளான். இண்டெர்நெட் பாங்கிங்கை செயல்படுத்தி நூதனமாக பணம் கொள்ளையடிக்கப்பட்டதை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.
புதுச்சேரி ரெயின்போ நகரை சேர்ந்தவர்கள் வாசுதேவன் - கீதா தம்பதி. வாசுதேவன் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியராக இருந்து ஓய்வுபெற்றவர். வாசுதேவன் - கீதா தம்பதி பெயரில் கரூர் வைஸ்யா வங்கியில் கூட்டு வங்கிக் கணக்கு உள்ளது. 3 நாட்களுக்கு முன் கரூர் வைஸ்யா வங்கி மேலாளர் எனக் கூறி மூதாட்டி கீதாவை போனில் அழைத்த ஒருவன், அவர்களது வங்கிக் கணக்கு விவரங்களை கேட்டுள்ளான்.
இதுபோன்ற அழைப்புகள் குறித்து ஏற்கனவே செய்திகளை கேள்விப்பட்டிருந்ததால், விவரங்களைக் கொடுக்க முதலில் கீதா தயங்கியுள்ளார். ஆனால் நான்கைந்து முறை விடாமல் தொடர்பு கொண்ட மர்ம நபர், மூதாட்டியை நம்பவைக்கும் வகையில் பேசியுள்ளான். பின்னர், நெட் பேங்கிங்கை செயல்படுத்துவதற்கான அவர்களுடைய பயனர் ஐடி, பாஸ்வேர்ட் ஆகியவற்றைப் பெற்ற மர்ம நபர், மூதாட்டியின் செல்போனுக்கு வந்த ஓடிபி எண் வரை கேட்டுப் பெற்றுள்ளான். கடைசியாக ஏடிஎம் அட்டை மீதுள்ள விவரங்கள் வரை அவன் கேட்க கேட்க சளைக்காமல் கொடுத்துள்ளார் கீதா.
தனக்குத் தேவையான அத்தனை விவரங்களையும் மூதாட்டியிடம் இருந்து சாமர்த்தியமாகக் கேட்டுப் பெற்ற மர்ம நபர், அவற்றை வைத்து இண்டெர்னெட் பேங்கிங்கை ஆக்டிவேட் செய்துள்ளான் என்கின்றனர் போலீசார். சிறிது நேரத்தில் வாசுதேவன் - கீதா தம்பதியின் கணக்கில் இருந்த சுமார் 20 லட்சம் ரூபாய் காணாமல் போயிருக்கிறது.
இதற்குள் வாசுதேவன் வீடு வந்து சேரவே, அவரிடம் விவரங்களைக் கூறியுள்ளார் கீதா. வங்கிக் கணக்கு இருப்பை சோதித்துப் பார்த்தபோது, அதிலிருந்து 20 லட்ச ரூபாய் காணாமல் போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்த வாசுதேவன், உடனடியாக கரூர் வைஸ்யா வங்கியின் கிளை ஒன்றில் அதிகாரியாகப் பணியாற்றும் உறவினர் ஒருவரைத் தொடர்பு கொண்டு விவரங்களைக் கூறியுள்ளார். அவர் எடுத்த முயற்சியில் சுமார் 11 லட்ச ரூபாய் வரை தம்பதியின் வங்கிக் கணக்குத் திரும்பி வந்ததாகக் கூறப்படுகிறது. மீதமுள்ள 9 லட்ச ரூபாயை அவர்களால் மீட்க முடியவில்லை. இதனையடுத்து சைபர் கிரைம் பிரிவு போலீசாரிடம் வாசுதேவன் புகாரளித்துள்ளனர்.
எந்த ஒரு சூழலிலும், எந்த வங்கி அதிகாரிகளும் தொலைபேசி மூலம் வாடிக்கையாளர்களின் ஏடிஎம் அட்டை குறித்தான விவரங்களையோ, நெட் பேங்கிங் தொடர்பான விவரங்களையோ கண்டிப்பாக கேட்க மாட்டார்கள் எனக் கூறுகின்றனர் போலீசார். அவ்வாறு வரும் அழைப்புகளை உடனடியாக புறக்கணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்துகின்றனர்.
Comments