தமிழகத்தில் புதிய தளர்வுகளின் கீழ், 23 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து தொடக்கம்; ஜவுளி கடைகள், நகை கடைகள் திறப்பு
புதிய தளர்வுகளின் கீழ், இரண்டாவது வகையில் உள்ள 23 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து தொடங்கியுள்ளது. சென்னை உள்பட 4 மாவட்டங்களை போன்று 23 மாவட்டங்களிலும் ஜவுளி கடைகள், நகை கடைகள் திறக்கப்பட்டுள்ளன.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து ஏற்கெனவே நடைபெற்று வருகிறது. தற்போது இரண்டாம் வகையில் உள்ள திருவண்ணாமலை, அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், தேனி, விருதுநகர் உள்ளிட்ட 23 மாவட்டங்களிலும், காலை 6 மணி முதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
50 சதவீத இருக்கைகளில் மட்டும் பயணிகளை அனுமதித்து, மாவட்டங்களுக்குள்ளும் மாவட்டங்களுக்கு இடையேயும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. முக கவசம் அணிந்துவரும் பயணிகள், சமூக இடைவெளியை பின்பற்றி பாதுகாப்பாக பயணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பேருந்துகள் கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்யப்பட்டு, அரசு பிறப்பித்துள்ள வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி இயக்கப்படுகின்றன.
இதன் மூலம் 27 மாவட்டங்களுக்கு இடையே பேருந்துகள் ஓடத்தொடங்கியுள்ளன. இதற்கேற்ப, சென்னை கோயம்பேட்டில் இருந்து வெளியூர்களுக்கு இன்று காலை 6 மணி முதல் பகல் மற்றும் இரவில் செல்லும் அரசு விரைவு பஸ்கள் வழக்கம்போல் இயக்கப்படுகின்றன.
சென்னையில் துணிக்கடைகள், நகைக் கடைகளும், ஷாப்பிங் மால்கள் இயங்கும் பிரபல வணிக வளாகங்களும் திறக்கப்பட்டுள்ளன. காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை மால்கள், துணிக்கடைகள், நகைக் கடைகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஏசி வசதி இன்றி கடைகள் மட்டும் திறக்கப்பட்டுள்ளன. பிரபல மால்களுக்குள் உள்ள திரையரங்குகளும், குழந்தைகளுக்கான விளையாட்டு அரங்குகளும் திறக்கப்படவில்லை. மேலும் வணிக வளாகங்ளில் உள்ள உணவகங்களில் நொறுக்குத் தீனி வகைகள் உட்பட அனைத்து வகை உணவுகளும் பார்சல்களாக மட்டுமே வழங்கப்படுகின்றன. கொரோனா முன்னெச்சரிக்கையாக உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்ட பிறகே பொதுமக்கள் ஜவுளிக்கடைகள், துணிக்கடைகள், மால்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
இதேபோல, ஜிம்கள் உடற்பயிற்சிக் கூடங்களும் திறக்கப்பட்டுள்ளன. கடற்கரைகளில் காலை 5 மணி முதல் காலை 9 மணி வரை, 4 மணி நேரம் நடைபயிற்சிக்கு மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளதால், மெரினா உள்ளிட்ட இடங்களில் மக்கள் காலை நேரத்தில் நடைபயிற்சி மேற்கொண்டனர்.
தமிழ்நாட்டில் முதல் வகையில் உள்ள கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களில், இரண்டு மாதத்திற்குப் பின்னர் ஹோட்டல்கள், டீக்கடைகள், சலூன் கடைகள் திறக்கப்பட்டன. இந்த 11 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் இன்னும் திறக்கப்படவில்லை.
கொரோனா பரவல் குறைந்து வருவதை அடுத்து, முதல் வகையில் உள்ள 11 மாவட்டங்களில் புதிய தளர்வுகள் அமலுக்கு வந்துள்ளன. ஹோட்டல்கள், தேநீர்கடைகள், பலகாரக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. காலை 6 மணி முதல் மாலை 7 மணிவரை பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதேபோல, 2 மாதங்களாக சலூன் கடைகள் திறக்கப்பட்டாததால், சித்தர்களை போல முடிவளர்த்து திரிந்தவர்கள் ஆர்வத்துடன் சலூன் கடைகளுக்கு சென்றனர். அழகு நிலையங்களும் 50 சதவீத வாடிக்கையாளர்களை அனுமதித்தன.
மின் பொருட்கள் மற்றும் ஹார்டுவேர் கடைகள் செயல்படலாம், புத்தகங்கள், எழுது பொருட்கள், காலணி கடைகள், பாத்திரக்கடைகள், போட்டோ வீடியோ ஸ்டூடியோக்கள், ஜெராக்ஸ் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்படுகின்றன.
வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை மற்றும் பழுதுபார்த்தல், வாகன விற்பனை மற்றும் பழுதுபார்த்தல் செல்போன் விற்பனை கடைகள், கட்டுமான பொருட்கள் விற்பனைக் கடைகளும் திறக்கப்பட்டன.
தனியார் நிறுவனங்கள் மற்றும் வங்கிகள், நிதி நிறுவனங்கள் போன்றவை 50 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அரசு அனுமதி அளித்துள்ளது. அரசு அலுவலகங்கள் 50% பணியாளர்களுடனும், சார் பதிவாளர் அலுவலகங்கள் 100% பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. அனைத்து வகை கட்டுமானப் பணிகள் அனுமதிக்கப்பட்டுள்ளன. மின் வணிகம் (e-commerce) மூலம் உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்களின் சேவை காலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை அனுமதிக்கப்படும். இதர மின் வணிக சேவை நிறுவனங்கள் (E-commerce) அனைத்தும் காலை 06.00 மணி முதல் இரவு 09.00 வரை இயங்கலாம்.
Comments