தமிழகத்தில் 4 மாவட்டங்களில் வழிபாட்டுத் தலங்கள் திறப்பு..! 23 மாவட்டங்களில் பேருந்துகள் இயக்கம்
தமிழ்நாட்டில் மூன்றாவது வகையில் உள்ள 4 மாவட்டங்களில், 45 நாட்களுக்குப் பிறகு அனைத்து வழிபாட்டுத் தலங்களும் திறக்கப்பட்டுள்ளன. 2ஆவது வகையில் உள்ள 23 மாவட்டங்களில் பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், முதல் வகையில் உள்ள 11 மாவட்டங்களிலும் புதிய தளர்வுகள் அமலுக்கு வந்துள்ளன.
புதிய தளர்வுகளுடன் 7ஆவது முறையாக, ஜூலை 5ஆம் தேதி காலை வரை நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. தொற்று பரவல் மிகவும் குறைவாக உள்ள மூன்றாவது வகை மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டுள்ளன.
அதிகாலையிலேயே கோவில்களில் நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்றது. உடல்வெப்பம் பரிசோதிக்கப்பட்டு, சானிட்டைசர் மூலம் கைகளை சுத்தம் செய்த பிறகு கோவில்களுக்கு அனுமதிக்கப்படுகின்றனர். சமூக இடைவெளியை கடைபிடித்தும், முகக்கவசம் அணிந்தும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை கோவில்களில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கோவிலில் இருக்கும் சிலைகளை பக்தர்கள் தொடுவதற்கு அனுமதிக்கக் கூடாது, விபூதி, குங்குமம் மற்றும் இதர பிரசாதங்களை வழங்குவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அர்ச்சனைக்காக பூ, பழம், தேங்காய் கொண்டு செல்ல அனுமதி இல்லை.
சென்னை வடபழனி முருகன் கோவிலில், தமிழ்க்கடவுளை பயபக்தியோடு இறையன்பர்கள் வழிபட்டுச் சென்றனர்.
திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் பக்தர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
காஞ்சிபுரம் ஆதி காமாட்சி அம்மன் கோவிலில் கொரோனா நோய் தொற்றிலிருந்து முழுமையாக விடுபட்டு நிரந்தரமாக கோவில்கள் திறக்க வேண்டி சிறப்பு யாகம் நடைபெற்றது. ஆதி காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் தீபாராதனையும் நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுராந்தகம் ஏரி காத்த கோதண்ட ராமர் கோயில், அச்சிறுப்பாக்கம் இளங்கிளி அம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் திருக்கோயில், நடுபழனி மரகத பால தண்டாயுதபாணி கோயில் உள்ளிட்டகோயில்கள் காலை 6 மணிக்கு திறக்கப்பட்டன.
இதேபோல, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் பள்ளிவாசல்களில் தொழுகையும், தேவாலயங்களில் பிரார்த்தனையும் நடைபெற்றது.
Comments