தமிழ்நாட்டில் இன்று முதல் கூடுதல் தளர்வுகளுடன் புதிய ஊரடங்கு அமல்..! 27 மாவட்டங்களில் பேருந்துப் போக்குவரத்து; 27 மாவட்டங்களில் துணிக்கடைகள், நகைக்கடைகள் திறக்க அனுமதி
தமிழ்நாட்டில் 23 மாவட்டங்களில் இன்று முதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வழிபாட்டுத் தலங்கள், வணிக வளாகங்கள் திறக்கப்படுகின்றன. சென்னை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் துணிக்கடைகள் மற்றும் நகைக்கடைகள் திறக்கப்படுகின்றன.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர், செங்கல்பட்டு மாவட்டங்களில், இன்று முதல் மேலும் தளர்வுகள் அமலுக்கு வந்துள்ளன. அனைத்து மத வழிபாட்டுத் தலங்களும் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. உடற்பயிற்சிக் கூடங்கள், அருங்காட்சியகங்கள் ஆகியவையும் இன்றுமுதல் திறக்கப்படுகின்றன. தனியார் நிறுவனங்கள் 100 சதவீதப் பணியாளர்களுடன் இன்று முதல் செயல்படும்.
அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி கன்னியாகுமரி, மதுரை, பெரம்பலூர், கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, திருச்சி, விழுப்புரம், வேலூர், விருதுநகர் ஆகிய 23 மாவட்டங்களில் பேருந்துப் போக்குவரத்து தொடங்குகிறது.
இன்றுமுதல் 9 ஆயிரத்து 333 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பாத்திரக்கடைகள், ஃபேன்சி- அழகுசாதனப் பொருட்கள் கடைகள் திறக்கப்படுகின்றன. தனியார் நிறுவனங்கள் 50 சதவீதப் பணியாளர்களுடன் இயங்கும். மேற்கண்ட 27 மாவட்டங்களிலும் வணிக வளாகங்கள், நகைக்கடைகள், துணிக்கடைகள் ஆகியவை 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை இயங்கும்.
நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், கரூர், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், நாகை, நாமக்கல் ஆகிய 11 மாவட்டங்களில் ஏற்றுமதி நிறுவனங்கள் 100 சதவீதப் பணியார்களுடன் இயங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி- கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடர்பான பணிகள் நடைபெறும். இந்த 11 மாவட்டங்களுக்கு திருமணம் சார்ந்த போக்குவரத்துக்கு இ பாஸ் கட்டாயம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
தீப்பெட்டித் தொழிற்சாலைகள் 100 சதவீதப் பணியாளர்களுடன் இன்று முதல் இயங்க உள்ளன. கடற்கரைகளில் காலை 5 மணி முதல் நடைபயிற்சிக்கு 4 மணி நேரம் அனுமதிக்கப்பட்டுள்ளதால், மெரினா உள்ளிட்ட இடங்களில் மக்கள் நடைபயிற்சி மேற்கொண்டனர்.
Comments