மூக்கறுக்கப்பட்ட வில்வித்தை வீரர்..! சர்வதேச போட்டிகள்தான் காரணமா?

0 5500
மூக்கு அறுக்கப்பட்ட வில் வித்தை வீரர்; தேசிய போட்டியில் பங்கேற்பதை தடுக்க நடந்த சதியா?

சென்னையில் வில்வித்தை வீரரின் மூக்கறுக்கப்பட்ட சம்பவம், அவர் சர்வதேச போட்டிகளில் கலந்துகொள்வதைத் தடுப்பதற்காக நடத்தப்பட்ட சதியா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது,.

சென்னை ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்த 21 வயது பொறியியல் பட்டதாரியான ஆதித்யா, சிறு வயதில் இருந்தே வில்வித்தை பயிற்சி பெற்று பல போட்டிகளில் கலந்து கொண்டவர். மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டு தங்கம், வெண்கலம் போன்றவற்றை கைப்பற்றியுள்ளார். தற்போது வில்வித்தை போட்டிகளில் ஜூனியர் லெவல் போட்டிகளில் பலருக்கும் பயிற்சியளித்து வரும் ஆதித்யா, முழுமையான வில்வித்தை பயிற்சியாளர் ஆவதற்கும் முயற்சித்து வருகிறார். சென்னை ஐசிஎப் வடக்கு காலனியில் அமைந்துள்ள "தயான் சந்த்" எனும் தனியார் வில்வித்தை பயிற்சி அகாடமியில் பயிற்சி பெற்று வரும் ஆதித்யா, சம்பவத்தன்று அந்த அகாடமியில் பயிற்சி முடித்துவிட்டு மதியம் ஒரு மணி அளவில் தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார்.

இந்த நிலையில்தான், ஐசிஎஃப் பகுதியில் வைத்து ஆதித்யாவின் முகத்தை மர்ம நபர் சிதைத்துள்ளான். அடுத்த தாக்குதலில் ஈடுபடுவதற்கு முன் அக்கம்பக்கத்தினர் அவன் மீது கற்களை வீசத் தொடங்கியுள்ளனர். இதனால் அந்த நபர் அங்கிருந்து தப்பியோடியுள்ளான்.

ஆதித்யா தற்போது ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்ட பிறகு சனிக்கிழமைதான் மீண்டும் ஆதித்யா தனது பயிற்சியை தொடங்கியதாகக் கூறப்படுகிறது. அடுத்த மாதம் பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டியில் அவர் கலந்து கொள்ள இருந்ததாகவும், இந்த நிலையில் அவர் தாக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொள்வதை தடுப்பதற்காக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதா ? முகத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதற்கு ஏதேனும் தனிப்பட்ட காரணங்கள் இருக்குமா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மயக்க நிலையில் இருப்பதால், ஆதித்யாவிடமிருந்து எந்தத் தகவலையும் பெற முடியவில்லை எனக் கூறும் காவல்துறையினர், பேப்பரில் அவர் எழுதி காண்பித்த ஒருசில விஷயங்களின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் கூறியுள்ளனர்.

ஆதித்யாவை தாக்குவதற்கு முன்பு அந்த மர்ம நபர் சுமார் 30 நிமிடங்களாக அதே பகுதியில் தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு கையில் துணியால் சுற்றிய கத்தி ஒன்றை மறைத்து வைத்துக்கொண்டு கண்காணித்து வந்ததும் அப்பகுதியில் பதிவாகியுள்ள சிசிடிவி காட்சிகள் மூலம் தெரியவந்துள்ளது. செல்போன் நெட்வொர்க்கை வைத்து அந்த நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments