ஏடிஎம் கொள்ளை சம்பவம்..! அடுத்தடுத்து அவிழும் மர்மங்கள்...
சென்னை எஸ்.பி.ஐ வங்கி ஏடிஎம்களில் கொள்ளையடித்த கொள்ளை கும்பல், அந்தப் பணத்தை கோடக் வங்கி ஏடிஎம் மூலம் ஹரியானாவுக்கு அனுப்பியது தெரியவந்துள்ளது.
சென்னையில் எஸ்பிஐ வங்கி பணம் செலுத்தும் எந்திரங்கள் உள்ள ஏடிஎம் மையங்களில் நூதன முறையில் கொள்ளையடித்த கும்பல் ஹரியானா மாநிலத்திலுள்ள "மேவாட்" கொள்ளையர்கள் என தெரியவந்தது.
இந்த சம்பவத்தில் முதலில் கைதான அமீர் அர்ஸ் என்ற கொள்ளையனை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வரும் போலீசார், அவன் கொடுத்த தகவல் மூலம் ஹரியானாவில் வீரேந்தர் என்ற கொள்ளையனை கைது செய்தனர்.
அவனை இன்று மாலை சென்னை அழைத்து வந்து விசாரிக்கவுள்ளனர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வீரேந்தருக்கு, அமீர் அர்ஸ் மாமன் மகன் என விசாரணையில் தெரியவந்துள்ளது. இருவரும் அரும்பாக்கத்தில் உள்ள சர்மா லாட்ஜில் அறை எடுத்து தங்கி இருந்து வங்கி ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.
கூகுள் மேப்பை பயன்படுத்தி சென்னையில் எஸ்பிஐ வங்கியின் பணம் டெபாசிட் எந்திரத்துடன் கூடிய ஏடிஎம் எங்கெல்லாம் உள்ளது என தெரிந்து கொண்டு கொள்ளையடித்துள்ளனர்.
விமானம் மூலம் சென்னை வந்தவர்கள், கோடம்பாக்கம் சென்று SFS எனும் செயலி மூலமாக இரு சக்கர வாகனத்தை வாடகைக்கு எடுத்து கொள்ளைக்கு பயன்படுத்தியுள்ளனர்.
மூன்று நாட்களில் சுமார் 20 லட்சத்தை கொள்ளையடித்தவர்கள், அவற்றை கையில் எடுத்துச் சென்றால் போலீஸ் சோதனையில் சிக்கிக் கொள்வோம் என்று, தரமணியில் உள்ள கோடாக் வங்கி டெபாசிட் ஏடிஎம் மூலமாக அமீரின் தாயார் பெயரில் உள்ள வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளனர்.
இவர்களிடம் இருந்து 10-க்கும் மேற்பட்ட பல்வேறு வங்கி கணக்குகளின் டெபிட் கார்டுகளை பறிமுதல் செய்துள்ள போலீசார், கொள்ளையர்களுக்கு இருசக்கர வாகனத்தை வாடகைக்கு கொடுத்த நபரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் ஹரியானாவில் கைது செய்யப்பட்ட மற்றொரு கொள்ளையனான வீரேந்தர் விமானம் மூலம் சென்னை அழைத்துவரப்பட்டான். அவனை தரமணி காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வீரேந்திரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலில் எடுத்து விசாரிக்க உள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
தொடர்ந்து அமீரையும் வீரேந்தரையும் சம்மந்தப்பட்ட ஏடிஎம் மையங்களுக்கு அழைத்துச் சென்று, அவர்கள் எப்படி கொள்ளை அடித்தனர் என நடித்து காண்பிக்கச் சொல்லி வீடியோ பதிவாக ஆதாரம் திரட்டவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.
Comments