கோவை மேட்டுப்பாளையம் பகுதிகளில் பயிர்களைச் சேதப்படுத்தி வரும் காட்டுயானையின் நடமாட்டத்தை கண்காணிக்க அதற்கு ரேடியோ காலர் பொருத்த வனத்துறையினர் நடவடிக்கை
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் அடிக்கடி விளைநிலங்களில் புகுந்து பயிர்களைச் சேதப்படுத்தும் காட்டு யானைக்கு ரேடியோ காலர் பொருத்துவதற்கான நடவடிக்கையை வனத்துறையினர் தொடங்கியுள்ளனர்.
மேட்டுப்பாளையம் பகுதிகளில் தொடர்ந்து பயிர்களைச் சேதப்படுத்தி வரும் பாகுபலி யானையைக் காட்டுக்குள் விரட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதனால் ஜி.பி.எஸ் தொழில்நுட்பம் கொண்ட ரேடியோ காலரை யானையின் மீது பொருத்த வனத்துறையினர் முடிவு செய்தனர். இதற்காகப் பொள்ளாச்சி டாப்சிலிப்பில் இருந்து 3 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன.
வனத்துறையினரைக் கொண்ட 7 குழுவினர் பாகுபலி யானையைத் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 5 பேர் கொண்ட மருத்துவக் குழுவினரும் தயார் நிலையில் உள்ளனர்.
பாகுபலி யானையைக் கண்டுபிடித்ததும் கும்கி யானைகளின் உதவியுடன் சமதளப் பரப்புக்கு அழைத்து வந்து மயக்க ஊசி செலுத்தி, அதன் கழுத்தில் ரேடியோ காலர் பொருத்தப்பட உள்ளது.
இவ்வாறு பொருத்தப்பட்டால் யானை விளைநிலத்துக்கு வந்தால் அதன் நடமாட்டத்தைக் கண்காணித்து மீண்டும் காட்டுக்குள் விரட்ட முடியும்.
Comments