ஒற்றை தாலிக்கு பைத்தியம் பட்டமா புதுப்பெண் உருக்கம்..! தற்கொலைக்கு முன் வீடியோ

0 7649

சென்னை திருமுல்லைவாயலில், கூடுதல் வரதட்சனை வாங்கி வராததால், மருமகளின் அறைக்கு செல்லும் மின்சாரத்தை துண்டித்து கொடுமை செய்த மாமியாரால் புதுப்பெண் உயிரை மாய்த்துக் கொண்டார். அவரது செல்போனில் இருந்து அழிக்கப்பட்ட மரண வாக்குமூல வீடியோ கைப்பற்றப்பட்டதால் மாமியார் மற்றும் கணவர் குடும்பத்துடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆவடி அருகே திருமுல்லைவாயல், அன்னை சத்யா நகரைச் சேர்ந்த பாலமுருகனுக்கும், எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் ஜோதிஸ்ரீ என்ற பட்டதாரி பெண்ணுக்கும் கடந்த டிசம்பர் மாதம் 25ந்தேதி திருமணம் நடந்தது.

திருமணத்தின் போது பேசியபடி நகை பணம் வரதட்சனையாக வழங்கப்பட்ட நிலையில் திருமணத்திற்கு பிறகு கணவன் பாலமுருகன், மாமியார் அம்சா ஆகியோர் சேர்ந்து தாங்கள் "வீட்டுக் கடன் வாங்கி உள்ளோம். எனவே, தங்களுக்கு பணம் தேவைப்படுகிறது, உனது பெற்றோரிடம் சென்று பணம் வாங்கி கொடு" என கூறி கொடுமைப்படுத்தி உள்ளனர்.

இதனையடுத்து கடந்த டிசம்பர் மாதம் இறுதியில், ஜோதிஸ்ரீ பாலமுருகனை விட்டு பிரிந்து பெற்றோர் வீட்டிற்கு சென்றார். அதன் பின்னர் இருதரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தியதன் பேரில் கடந்த ஏப்ரல் 4ந்தேதி ஜோதிஸ்ரீ திருமுல்லைவாயலில் உள்ள கணவர் பாலமுருகன் வீட்டுக்கு மீண்டும் வந்தார். அப்போது மாமியார் அம்சா அவரை வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகின்றது

இதனையடுத்து ஜோதிஸ்ரீ வீட்டின் முதல் மாடிக்கு சென்றார். இதனால் ஆத்திரமடைந்த அம்சா, ஜோதிஸ்ரீ இருக்கும் அறைக்கு செல்லும் மின் வயரை துண்டித்தார்.இதனால் மனமுடைந்த ஜோதிஸ்ரீ தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின் அடிப்படையில் ஆவடி போலீஸ் உதவி கமிஷனர் சத்தியமூர்த்தி தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது ஜோதிஸ்ரீ செல்போனில் இருந்து சில வீடியோக்கள் அழிக்கப்பட்டதை கண்டறிந்த போலீசார் அதனை ரெக்கவரி சாப்ட்வேர் மூலம் கைப்பற்றினர் அதில் தனக்கு பைத்தியக்காரி என்று பட்டம் சூட்டி கணவரும் மாமியாரும் செய்த கொடுமைகள் குறித்து விவரித்திருந்ததோடு, தனது சாவுக்கு அவர்கள் இருவரும் தான் காரணம் என்று கூறியிருந்தார்.

மேலும் அவர் உருக்கமாக எழுதிய கடிதம் ஒன்றும் சிக்கியது.
அதில் தமது தற்கொலைக்கு காரணமான தனது கனவர் மற்றும் அவரது குடும்பத்தினரை விட வேண்டாம் என தமது குடும்பத்தினருக்கு உருக்கமாக பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் ஜோதிஸ்ரீ தற்கொலைக்கு அவரது கணவர் பாலமுருகன், மாமியார் அம்சா , பாலமுருகன் சகோதரர் சத்யராஜ் ஆகியோர் தான் காரணம் என திருவள்ளூர் ஆர்.டி.ஓ விசாரணையில் தெரியவந்தது. இதனை அடுத்து, அவர் உத்தரவுவின் பேரில் திருமுல்லைவாயல் போலீசார் மூவரையும் கைது செய்தனர்.

தற்கொலை செய்து கொண்ட புதுப்பெண்ணின் மரண வாக்குமூலம் வீடியோ சிக்கிய பின்னரும், ஆர்.டி.ஓ அளித்த அறிக்கை தாமதமாக கிடைக்கப்பெற்றதால் 2 மாதங்களுக்கு பிறகு சம்பந்தப்பட்ட 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்ததாக கூறப்படுகின்றது.

புதுப்பெண்ணை டார்ச்சர் செய்து கூடுதல் வரதட்சனையாக பணம் பெற்று வீட்டுக்கடனை அடைக்க திட்டம் போட்ட, கணவன் மற்றும் மாமியார் குடும்பத்துடன் புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments