தடுப்பூசித்திட்டத்தை மக்களிடம் விரிவாகக் கொண்டு செல்ல தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்களின் உதவியைப் பெற வேண்டும்: பிரதமர் மோடி அறிவுறுத்தல்
தடுப்பூசித்திட்டத்தை மக்களிடம் விரிவாகக் கொண்டு செல்ல தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்களின் உதவியைப் பெறுமாறு அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். இந்த வேகம் குறைந்து விடக் கூடாது என்றும் மோடி வலியுறுத்தியுள்ளார்.
நாட்டில் ஜூன் 21 ஆம் தேதி முதல் மத்திய அரசே தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு இலவசமாக விநியோகிக்கும் திட்டம் அமலுக்கு வந்தது. இதையடுத்து பல்வேறு மாநிலங்களில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச தடுப்பூசி என்ற மத்திய அரசின் இலக்கு வேகம் எடுத்துள்ளது.
செப்டம்பர் மாதம் முதல் 2 வயதுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கும் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே கோவிஷீல்ட், கோவாக்சின், ஸ்புட்னிக் வி ஆகிய மூன்று தடுப்பூசிகளுக்கு அவசர கால பயன்பாட்டுக்கான அனுமதியளிக்கப்பட்டுள்ள நிலையில் வரும் மாதங்களில் மேலும் சில தடுப்பூசிகள் அறிமுகமாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
நாடு தழுவிய அளவில் இலவசமாகத் தடுப்பூசி போடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ள நிலையில், நிலைமையை ஆய்வு செய்ய பிரதமர் மோடி சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளுடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.
தடுப்பூசித் திட்டம் திருப்திகரமாக செயல்படுத்தப்படுவதாகத் தெரிவித்த பிரதமர், மக்களிடம் இத்திட்டத்தைக் கொண்டு சேர்க்க தன்னார்வலர்கள் தொண்டு அமைப்புகள் உதவுமாறு பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார். மாநில அரசுகளுடன் இணைந்து செயல்படுமாறு மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.
Comments