12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் இருந்து 50 சதவீதம், 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் இருந்து 20 சதவீதம் 12ஆம் வகுப்பு செய்முறைத்தேர்வு, அகமதிப்பீட்டில் இருந்து 30 சதவீதம் என்ற விகிதாச்சார அடிப்படையில், 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 3 பாடங்களின் சராசரி அடிப்படையில் 50 சதவீத மதிப்பெண்கள் எடுத்துக் கொள்ளப்படும். 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வில், எழுத்துத் தேர்வில் இருந்து 20 சதவீதம் எடுத்துக் கொள்ளப்படும்.
12ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வு, அக மதிப்பீட்டில் இருந்து 30 சதவீதம் எடுத்துக் கொள்ளப்படும். அதாவது 12ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வில் இருந்து 20 சதவீதம், இன்டர்னல் எனப்படும் அகமதிப்பீட்டில் இருந்து 10 சதவீதம் எடுத்துக்கொள்ளப்படும். செய்முறை தேர்வு இல்லாத பாடங்களில் அகமதிப்பீட்டில் இருந்தே 30 சதவீத மதிப்பெண்கள் எடுத்துக் கொள்ளப்படும். 12ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வுகளில் பங்கு பெற இயலாத மாணவர்களுக்கு, அதற்குப் பதிலாக 11ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வுகளில் இருந்து மதிப்பெண்கள் எடுத்துக் கொள்ளப்படும்.
11ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வுகள் இரண்டிலும் பங்குபெற இயலாத மாணவர்களுக்கு, 10 மற்றும் 11ஆம் வகுப்பு எழுத்துத் தேர்வுகளின் அடிப்படையில் 12ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வு மதிப்பெண் வழங்கப்படும். கடந்த ஆண்டு 11ஆம் வகுப்பு எழுத்துத்தேர்வில் ஏதேனும் பாடங்களில் தோல்வி அடைந்திருந்தாலோ, தேர்வு இயலாத நிலை இருந்திருந்தாலோ, அந்த தேர்வுகளை தற்போது எழுத வாய்ப்பு இல்லாத நிலையை கருத்தில் கொண்டு, 35 விழுக்காடு மதிப்பெண் வழங்கப்படும். 11ஆம் வகுப்பு எழுத்துத் தேர்வு, அகமதிப்பீடு, செய்முறைத் தேர்வு, 12ஆம் வகுப்பு அகமதிப்பீடு, செய்முறைத் தேர்வு ஆகிய தேர்வுகளில் ஒன்றில்கூட கலந்து கொள்ளாத மாணவர்கள் தனித்தேர்வர்களாக தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும்.
12ஆம் வகுப்பு மாணவர்களுடைய மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி ஜூலை 31ஆம் தேதிக்குள் அரசுத் தேர்வுகள் துறை இணைய தளத்தில் வெளியிடப்படும். மதிப்பீட்டு முறையில் கணக்கிடப்படும் மதிப்பெண்கள் குறைவாக உள்ளதாகக் கருதும் மாணவர்களுக்கு, அவர்கள் விரும்பினால் 12ஆம் வகுப்பு எழுத்துத் தேர்வெழுத வாய்ப்பு வழங்கப்படும்.
அவ்வாறு நடத்தப்படும் தேர்வில் பெறும் மதிப்பெண்ணே, இறுதி மதிப்பெண்ணாக அறிவிக்கப்படும். தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களுக்கு கொரோனா பரவல் சீரடைந்தவுடன், பின்னர் கால அட்டவணை அறிவிக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Comments