தமிழகத்தில் ஜூலை 5 வரை ஊரடங்கு நீட்டிப்பு..! -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

0 16872

மிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, ஜூலை 5 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் மாவட்டங்களை 3 வகைகளாக பிரித்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 23 மாவட்டங்களில் பேருந்துகள் இயங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அனுமதி வழங்கி உள்ளார்.

தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 28 ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில் கூடுதல் தளர்வுகள் குறித்து முடிவு எடுக்க, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மருத்துவ நிபுணர்களுடன் சென்னையில் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 5 ஆம் தேதி காலை 6 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி கன்னியாகுமரி, மதுரை, பெரம்பலூர், கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, திருச்சி, விழுப்புரம், வேலூர், விருதுநகர் ஆகிய 23 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

இதன்படி, மாவட்டங்களுக்கு இடையே 50% இருக்கைகளுடன் குளிர்சாதன வசதி இல்லாமல் பொது போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. உடற்பயிற்சி கூடங்கள், யோகா பயிற்சி நிலையங்கள் 50 சதவீத நபர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அருங்காட்சியகங்கள், தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட சின்னங்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இந்த 23 மாவட்டங்களிலும் செல்பேசி, அதனை சார்ந்த பொருட்கள் விற்கும் கடைகள் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை திறக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது, கணினி மென்பொருட்கள், வன்பொருட்கள், மின்னணு சாதனங்கள் விற்பனை செய்யும் கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது,

நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், கரூர், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், நாகை, நாமக்கல் ஆகிய 11 மாவட்டங்களில் சில கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

காலை 6 முதல் இரவு 7 மணி வரை தேநீர் கடைகளில் பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும். மின் சாதனங்கள் ஹார்டுவேர் கடைகள், கல்வி புத்தகங்கள், எழுது பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. பாத்திர கடைகள், பேன்சி, அழகு சாதன பொருட்கள், போட்டோ, வீடியோ கடைகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

ஜெராக்ஸ், சலவை, தையல் அச்சகங்கள் காலை 9 மணி முதல் இரவு 7 வரை செயல்படலாம். மிக்சி, கிரைண்டர் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் விற்கும் கடைகள் செயல்படவும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. காலணி விற்பனை, செல்பேசி, அதனை சார்ந்த பொருட்கள் விற்பனைக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. சாலையோர உணவு கடைகளில் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை பார்சல் சேவை மட்டும் அனுமதி அளிக்கப் பட்டு உள்ளது. இந்த 11 மாவட்டங்களுக்கு திருமணம் சார்ந்த போக்குவரத்துக்கு இ பாஸ் கட்டாயம் என அறிவிக்கப்பட்டு உள்ளது,

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பில் பொதுவான தளர்வுகள் வெளியிடப்பட்டு உள்ளன. அதன்படி தமிழ்நாடு முழுவதும் அனைத்து கடற்கரைகளிலும் காலை 5 மணி முதல் காலை 9 மணி வரை நடைபயிற்சி செய்ய அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. தீப்பெட்டி தொழிற்சாலைகள் 100 சதவீத தொழிலாளர்களுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. 11 மாவட்டங்கள் நீங்கலாக எஞ்சிய மாவட்டங்களுக்கு இடையே திருமணம் சார்ந்த போக்குவரத்துக்கு இ பாஸ் மற்றும் இ பதிவு தேவையில்லை.

இந்த 11 மாவட்டங்களுக்கு பிற மாவட்டங்களில் இருந்து திருமண நிகழ்வுகளுக்கு இ - பாஸ் பெற்று வந்து செல்ல அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது, திருமண நிகழ்வுகளில் 50 சதவீதம் பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது. நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, குற்றாலம் பகுதிகளுக்கு அவசர காரணங்களுக்கு மாவட்ட ஆட்சியரிடம் இ பாஸ் பெற்று பயணிக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments