எஸ்பிஐ ஏடிஎம் கொள்ளை... "மேவாட்" கொள்ளையர்களின் கைவரிசை..!
சென்னையில் எஸ்பிஐ ஏடிஎம் கொள்ளை வழக்கில் ஈடுபட்ட கொள்ளையர்கள் இந்தியாவின் சைபர் குற்றங்களுக்கு தலைநகரம் என காவல் துறையில் அழைக்கப்படும் மேவாட் எனும் பகுதியில் பதுங்கியதால் அவர்களை பிடிப்பதில் தனிப்படை போலீசாருக்கு சவாலாக மாறியுள்ளது. யார் இந்த மேவாட் கொள்ளையர்கள்? அவர்களை பிடிக்க சென்னை தனிப்படை என்ன செய்யப் போகிறது என்பது குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு
வங்கி மேலாளர்கள் போல் பேசி மோசடி செய்வது, கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மோசடி, போலி முகநூல் துவக்கி பணம் பறிக்கும் மோசடி எனப் பல்வேறு விதமாக சைபர்கிரைம் மோசடிகளை அரங்கேற்றி கோடிக்கணக்கான ரூபாய் கொள்ளையடிக்கும் கொள்ளையர்களின் தலை நகராக இரண்டு இடங்கள் செயல்படுகின்றன. ஒன்று ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஜம்தாரா நகரம் மற்றொன்று, ஹரியானா மாநிலத்தின் மேவாட் மாவட்டம்.
இந்தியா முழுவதும் மட்டுமல்ல, சர்வதேச அளவில் நடைபெறும் சைபர் க்ரைம் குற்றங்கள் தொடர்புடைய இந்த இரண்டு இடங்களில், சைபர் குற்றங்களை மாட்டிக்கொள்ளாமல் செய்வற்கென பயிற்சி மையங்களே செயல்படுகின்றன என கூறுகின்றனர் சைபர் கிரைம் போலீசார். அங்கு உள்ள இளைஞர்கள் படித்து வேலை கிடைக்காமல் இதுபோன்று சைபர் குற்றங்களில் இறங்கியுள்ளனர். இந்த குற்றவாளிகளை பற்றி விசாரிக்கவோ அல்லது கைது செய்யவோ சாதாரணமாக போலீசார் இந்த ஊருக்குள் எளிதில் நுழைந்து விட முடியாது. மத்திய உள்துறை அமைச்சகமே நேரடியாக தலையிட்டு சைபர் குற்றங்களை குறைப்பதற்காக ஜார்கண்ட் மற்றும் ஹரியானா போலீசில் "ஸ்பெஷல் டாஸ்க் ஃபோர்ஸ்" உருவாக்கி கண்காணித்து வருகின்றனர்.
பல்வேறு மாநிலங்களில் சைபர் குற்றங்களை அரங்கேற்றிவிட்டு, இந்த ஊர்களில் பதுங்கி கொள்வதை கொள்ளையர்கள் வாடிக்கையாக வைத்துள்ளனர். அதன் தொடர்ச்சியாக தற்போது சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் எஸ்பிஐ ஏடிஎம்-களில் நூதன முறையில் கொள்ளையடித்த கும்பல் மேவாட் மாவட்டத்தில் பதுங்கியிருப்பதை சென்னை தனிப்படை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். 5 கும்பலாக பிரிந்து சென்னையில் கைவரிசை காட்டிய கும்பல், தமிழகத்தில் 1 கோடி ரூபாய்க்கு மேல் எஸ்.பி.ஐ ஏ டி எம் களில் கொள்ளையடித்து மேவாட் மாவட்டத்தில் பதுங்கியுள்ளனர். அதில் அமிர் ஹர்ஸ் என்ற கொள்ளையனை மேவாட்டிற்குள் நுழைவதற்கு முன்பு சென்னை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
கொள்ளை கும்பலை சேர்ந்த மற்றவர்களை பிடிக்க ,சென்னை தனிப்படை போலீசார் ஃபரிதாபாத்தில் முகாமிட்டுள்ளனர். தனிப்படை போலீசார் மேவாட் மாட்டத்திற்குள் நுழைய முடியாமல் இருக்கின்றனர். இதனால் ஹரியானா போலீசார் உதவியுடன் கொள்ளையர்களை பிடிக்க முயற்சி செய்து வருகின்றனர். குறிப்பாக அந்த பகுதி மக்களும், சில போலீசாரும் கொள்ளையர்களுக்கு உதவியாக இருப்பதாலும், ஊர் தலைவர்கள் மற்றும் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திதான் கொள்ளையர்கள் கைது செய்ய முடியும் என கூறுகின்றனர் போலீசார்.
இந்த "மேவாட்" கொள்ளையர்கள் ஒவ்வொரு முறையும் நூதன டெக்னிக்குகளை உருவாக்கி, அதை இளைஞர்களுக்கு பயிற்சி அளிப்பார்கள். அதன்படி நாடு முழுவதும் குறிப்பிட்ட தொகையை கொள்ளையடிக்க டார்கெட் வைப்பார்கள். அந்த டார்கெட்டின் படி கோடிக்கணக்கான ரூபாய் கொள்ளையடித்த பிறகு மற்றொரு நூதன முறையில் கொள்ளையடிப்பது குறித்து திட்டம் வகுப்பார்கள். அதற்கு முன்பு தேவையான வங்கி கணக்குகளை உருவாக்க போலி ஆவணங்களை உருவாக்கி கணக்கு தொடங்கி தனித்தனி குழுவாக களமிறங்குவார்கள்.
சைபர் குற்றங்களில் கைதேர்ந்த நைஜீரியர்கள், ருமேனியர்கள் மற்ற நாடுகளுக்கு சென்று புதிதாக பயன்படுத்தும் சைபர் குற்றங்கள் குறித்து இணையத்தில் படித்து தெரிந்து கொண்டு மேவாட் கும்பல் இந்தியாவில் கைவரிசை காட்டுகின்றனர்.
ஒரு முறை கொள்ளையடிக்க பயன்படுத்திய டெக்னிக்கை மீண்டும் சைபர் கொள்ளையர்கள் பயன்படுத்தமாட்டார்கள் எனச் சொல்லப்படுகிறது. இந்த மேவாட் கொள்ளையர்கள் 10-ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு , பொறியியல் பட்டதாரிகளாக இருப்பதாகவும் போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
எஸ்பிஐ ஏடிஎம் கொள்ளை வழக்கில் ஒருவனை மட்டும் பிடித்துள்ள சென்னை தனிப்படை ஹரியானா போலீஸ் உதவியுடன் ஒட்டுமொத்த கும்பலையும் மேவாட்டிற்குள் புகுந்து பிடிக்கும் சவாலில் இறங்கியுள்ளது.
Comments